மும்பை: இந்தியாவின் மும்பை நகரின் மலாடு என்ற பகுதியில் இருந்து அதானி குழுமத்திற்குச் சொந்தமான 6,000 கிலோ எடையுள்ள இரும்புப் பாலம் திருடப்பட்டதன் தொடர்பில் நால்வர் கைதாகி இருக்கிறார்கள்.
மலாடு பகுதியில் ஓடும் பெரிய சாக்கடைக்கு உயரே அமைக்கப்பட்டு இருந்த பாலம் சீர்கெட்டு மோசமாகிவிட்டது. அதை மாநகராட்சி அதிகாரிகள் இடித்துவிட்டு, புதிய பாலம் கட்டுவதற்கான வேலையில் ஈடுபட்டனர்.
அந்தப் பாலத்தின் வழியாகத்தான் அதானி எலக்டிரிசிட்டி என்ற நிறுவனத்தின் பெரும் பெரும் மின்னழுத்த மின்கம்பிகள் சென்றன.
ஆகையால் அவற்றுக்குப் பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக அதானி நிறுவனம் தற்காலிகமாக 6,000 கிலோ எடைகொண்ட இரும்புத் தண்டவாளங்களைக் கொண்டு தற்காலிக பாலத்தைக் கட்டியது.
அந்த இடத்தில் மாநகராட்சி நிர்வாகம் புதிய பாலம் கட்டிய பிறகு, 6,000 கிலோ எடைகொண்ட இரும்புப்பாலத்தை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தி அருகில் போட்டுவைத்திருந்தனர்.
திடீரென அந்த இரும்புப்பாலத்தைக் கடந்த மாதம் காணவில்லை. உடனே அதானி நிறுவன ஊழியர்கள் இது குறித்து மும்பை பாங்குர் நகர் காவல்துறையில் புகார் செய்தனர். புகாரின் அடிப்படையில் வழக்கு பதியப்படடு விசாரணை நடந்துவந்தது.
இரும்புப்பாலம் இருந்த இடத்தில் கண்காணிப்புச் சாதனம் எதுவும் இல்லை. இதனால் திருடிச் சென்றது யார் என்று கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இரும்புப்பாலம் இருந்த இடத்திலிருந்து சற்று தொலைவில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புப் படச்சாதனப் பதிவுகளை ஆய்வுசெய்தபோது, ஒரு லாரிமீது அதிகாரிகளுக்குச் சந்தேகம் கிளம்பியது.
தொடர்புடைய செய்திகள்
அந்த லாரியின் பதிவு எண்ணைப் பயன்படுத்தி விசாரணை நடத்திய அதிகாரிகள், இரும்புப்பாலத்தைத் திருடிய ஒருவரைக் கைதுசெய்து, திருடப்பட்ட இரும்புப்பாலத்தை மீட்டனர். பிறகு இதர மூவர் பிடிபட்டனர். விசாரணை தொடர்வதாகத் தெரிவிக்கப்பட்டது.
கைதான நால்வரில் ஒருவருக்குத்தான் அந்த இரும்புப்பாலத்தைக் கட்டுவதற்கு அதானி நிறுவனம் ஒப்பந்தம் வழங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

