மணிப்பூர் கலவரம்: காவல்துறை அதிகாரி உள்ளிட்ட நால்வர் பலி

1 mins read
91d26bce-3d1d-490f-b5a0-d3817bfd6951
மணிப்பூரில் புதிதாக மூண்ட கலவரத்தில் காவல்துறை அதிகாரி உள்பட நால்வர் உயிரிழந்துவிட்டனர். - படம்: இந்திய ஊடகம் 

இம்பால்: மணிப்பூரில் பெரும்பான்மை மெய்தி சமூகத்திற்கும் பழங்குடி பிரிவினருக்கும் இடையே கடந்த மே மாதம் 3ஆம் தேதி வெடித்த கலவரம் இன்னமும் ஓயவில்லை.

பொதுமக்களில் 120 பேர் இதுவரை உயிரிழந்துவிட்டனர். 3,000 பேர் காயமடைந்து உள்ளனர்.

மணிப்பூர் கலவரம் ஒரு மாதத்திற்கும் கூடுதலாக நீடித்து வருகிறது. வன்முறை பரவி வரும் சூழலில், மக்கள் அச்சம், பதற்றத்துடனேயே வாழ்கிறார்கள். இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். ஆசிரியர்கள், மாணவர்கள் என அன்றாட பணியில் ஈடுபட்டு இருந்தவர்கள் கூட ஆயுதங்களை ஏந்திய சூழல் காணப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில், மோதலை தூண்டும் வகையில் வதந்தி பரவி விடாமல் தடுப்பதற்காக, கடந்த மாதம் 3ஆம் தேதி இணையத்தள சேவைக்குத் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது.

எனினும், கலவரம் தொடர்ந்து அவ்வப்போது நடந்து வருகிறது. இந்த நிலையில், பிஷ்ணுப்பூர் மாவட்டத்தில் வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் இரவு நேரத்தில் பிரச்சினை மூண்டது. ஒரு கும்பல் தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அங்கு கூடுதலாக காவல்துறை அதிகாரிகள் குவிக்கப்பட்டனர். தாக்குதலில் ஈடுபட்டவர்களும் பதிலுக்கு மற்றொரு தரப்பினரும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டனர்.

அந்தச் சம்பவத்தில் கங்வாய் பகுதியில் காவல்துறை அதிகாரி ஒருவர், பதின்ம வயது சிறுவன் உள்பட நால்வர் உயிரிழந்தனர். சிலர் காயம் அடைந்தனர். இதனால், மீண்டும் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்