கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஜூலை 8ஆம் தேதி காலை உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது.
ஆனால் தேர்தல் களம் வன்முறைக் களமாக மாறியதால் குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தங்களின் தொண்டர்கள் மூவர் இறந்துவிட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
பாஜகவும் தங்கள் கட்சியினர் சிலர் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
வன்முறைச் சம்பவங்களுக்கு திரிணாமுல் காங்கிரசும் பாரதிய ஜனதா கட்சியும் ஒன்றையொன்று குற்றம் சாட்டி வருகின்றன.
மேற்கு வங்க மாநிலம் முழுவதும் 73,887 உள்ளாட்சி இடங்களுக்கான தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப் பதிவு முடிந்த பிறகு ஜூலை 11ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது.
பிரசாரம் தொடங்கியதிலிருந்து வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன. இதனால் கூடுதல் மத்திய படைகளை மாநில தேர்தல் ஆணையம் அழைத்திருந்தது.
கடந்த 2018ஆம் ஆண்டில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 34 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி கண்டது.
தொடர்புடைய செய்திகள்
தற்போதைய தேர்தலில் 73,887 பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர். மொத்தம் 2.06 லட்சம் வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.
கூச்பெஹார் மாவட்டத்தில் ஃபாலிமாரி கிராமப் பஞ்சாயத்தில் நடந்த வன்முறையில் பாஜக தேர்தல் அதிகாரியான மாதப் பிஸ்வாஸ் கொல்லப்பட்டார்.
வாக்குச்சாவடிக்கு வந்த அவரை நுழையவிடாமல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்கள் தடுத்துநிறுத்தியதால் மோதல் ஏற்பட்டது என்று பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.
ஆனால் இதனை திரிணாமுல் காங்கிரஸ் மறுத்துள்ளது.
இதற்கிடையே இந்தக் கொலைச் சம்பவம் குறித்த தகவல் பரவியதால் பல பகுதிகளிலும் வன்முறைச் சம்பவங்கள் மூண்டன.
நார்த் 24 பர்கானாஸ் பகுதியில் சுயேட்சை வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளரான அப்துல்லா என்பவர் வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்டு நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததார் என்று காவல்துறை தெரிவித்தது.
இந்தக் கொலையைக் கண்டித்து உள்ளூர்வாசிகள் டக்கி சாலையை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரெஜிநகர், கார்கிராம் பகுதிகளில் நடந்த வன்முறையில் தங்கள் கட்சியைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டதாகவும் கூச்பெஹார் மாவட்டத்தின் துஃபாகஞ்ச் பகுதியில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

