ஹைதராபாத்: ஆந்திராவின் முன்னாள் முதல்வர் மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் 74வது பிறந்த நாள் ஆந்திராவில் கடந்த சனிக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
அந்தப் பிறந்த நாள் கொண்டாட்டதையொட்டி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஒய்.எஸ்.ஆர் ராஜசேகர ரெட்டியின் பிறந்த நாளில் அவருக்கு எனது அஞ்சலி உரித்தாகுக.
“மக்களின் வளப்பத்துக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த அரும் தலைவர் அவர். மக்களால் எப்போதும் அவர் நினைவுகூரப்படுவார், என்று தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.
அவரது இந்தப் பதிவிற்கு ராஜசேகர ரெட்டியின் மகளும் ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சித் தலைவருமான ஷர்மிளா, தனது டுவிட்டர் பதிவில் நன்றி தெரிவித்துள்ளார்.
“மறைந்த ஒய்எஸ்ஆர் பிறந்தநாளை அன்புடன் நினைவுகூர்ந்தமைக்கு நன்றி. ஒய்எஸ்ஆர் ஓர் உறுதிமிக்க கொள்கையுடைய தலைவர்.
“மக்களுக்கு சேவையாற்றும்போது அவர் உயிரிழந்தார். உங்கள் தலைமையின்கீழ் நாட்டிற்கு ஒளிமயமான எதிர்காலம் பிறக்கும் என்று அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். அவரது நலத்திட்ட கொள்கைகள் இப்போதும் நாடு முழுவதும் விருப்பமான நிர்வாக முன்மாதிரியாக உள்ளது. டாக்டர் ஒய்எஸ்ஆர் உங்கள் இதயத்தில் நிலைத்திருப்பதற்கு நன்றி,” என்று கூறியுள்ளார்.
ஒய்எஸ்ஆர் தெலுங்கானாவின் கட்சித் தலைவர் ஷர்மிளாவின் இந்தப் பதில், அவர் காங்கிரசில் சேர்வதற்குத் தயாராகி வருகிறாரோ என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
ஷர்மிளா, ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சியை 2021 ஜூலை 8ஆம் தேதி நிறுவினார். அப்போது ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சித் தலைவர்களும் ஆதரவாளர்களும் காங்கிரசில் இணைவதற்காகவே அந்தக் கட்சி நிறுவப்படுவதாகக் கூறப்பட்டது.