மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான 40 சட்டமன்ற உறுப்பினர்கள், உத்தவ் தாக்கரே ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 14 பேர் என சிவசேனா கட்சியைச் சேர்ந்த மொத்தம் 54 பேர் மீது தகுதிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பாக சபாநாயகர் ராகுல் நார்வேகர், கடந்த சனிக்கிழமை அவர்களுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதற்கு அவர்கள் ஏழு நாட்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என சபாநாயகர் கேட்டுக்கொண்டுள்ளார். சட்டமன்ற உறுப்பினர்கள் அளிக்கும் விளக்கத்தைப் பொறுத்து அவர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார், கட்சியை இரண்டாக உடைத்து பாஜகவில் இணைந்து துணை முதல்வராகியுள்ள நிலையில், 54 எம்எல்ஏக்கள் மீது தகுதி நீக்க விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக ஒருங்கிணைந்த சிவசேனாவின் கொறடாவாக இருந்த எம்எல்ஏ சுனில் பிரபு, ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 பேரை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் ராகுல் நார்வேகரிடம் கடிதம் வழங்கியிருந்தார்.
அதேபோல் ஷிண்டே தரப்பு உத்தவ் தாக்கரே அணியின் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கடிதம் வழங்கியது. ஆனால் சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து உத்தவ் தாக்கரே தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஷிண்டே உள்ளிட்டவர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து விசாரணை நடத்திய நீதிமன்றம், விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்நிலையில் தகுதி நீக்க நடவடிக்கையை மகாராஷ்டிர சபாநாயகர் ராகுல் நார்வேகர் தொடங்கி உள்ளார்.