அமர்நாத் நடைப்பயணம் மீண்டும் தொடங்கியது

அமர்நாத் நடைப்பயணம் மீண்டும் தொடங்கியது

2 mins read
cef62ffa-bed5-4300-9421-ea677fe2c79b
ஜம்மு காஷ்மீர், ராம்பன் மாவட்டத்தில் அதிகமான பனிப்பொழிவு காரணமாக அமர்நாத் புனித நடைப்பயணம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. - படம்: ஊடகம்

சிம்லா: இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

அதையடுத்து அங்குள்ள ஏழு மாவட்டங்களுக்குச் சிவப்பு எச்சரிக்கையும், மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அந்த மாநில அரசு, பாதுகாப்பு, நிவாரணம் மற்றும் மீட்புப் பணி நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.

குறிப்பாக சம்பா, காங்க்ரா, குலு, மண்டி, உனா, ஹமிர்பூர் மற்றும் பிலாஸ்பூர் மாவட்டங்களுக்குச் சிவப்பு எச்சரிக்கையும், சிம்லா, சோலன் மற்றும் சிர்மவுர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

தொடர் கனமழை, நிலச்சரிவு காரணமாக சிம்லாவுக்கும் கல்காவுக்கும் இடையேயான ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், சோலன் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பல இடங்களில் வீடுகள் சேதமடைந்தன. சிம்லா, சம்பா, சோலன் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக சாலைப் போக்குவரத்து முடங்கி மக்களின் இயல்புவாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மாண்டி மாவட்டத்தின் ரியாஸ் ஆற்றில் தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாண்டியில் உள்ள அனைத்து அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களுக்கு திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என மாண்டி நகர துணை காவல் ஆணையாளர் அரிந்தம் சவுத்ரி தெரிவித்தார்.

இதற்கிடையே ஜம்மு காஷ்மீர், ராம்பன் மாவட்டத்தில் பனிப்பொழிவால் சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. அதனால், அமர்நாத் புனித நடைப்பயணம் தடைபட்டுள்ளது. இதனால், நடைப்பயணம் சென்ற சுமார் 6,000 பக்தர்கள், நிவாஸ் சந்திரகோட்டில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு நாள்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த புனித நடைப்பயணம் நேற்று மாலை மீண்டும் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, கனமழை காரணமாக சிக்கித் தவித்த 700க்கும் மேற்பட்ட புனிதப் பயணிகளை ராணுவத்தினர் அழைத்துச் சென்று அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள காசிகுண்ட் முகாமில் தங்க வைத்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்