மேற்கு வங்காளம்: ஐந்து மாவட்டங்களில் மீண்டும் தேர்தல்

மேற்கு வங்காளம்: ஐந்து மாவட்டங்களில் மீண்டும் தேர்தல்

2 mins read
c42649bc-9281-4764-831b-5dbde5df8600
மேற்கு வங்க மாநிலத்தின் பல பகுதிகளில் மறுதேர்தல் நடத்தப்பட்டது. அப்போது மீண்டும் கலவரம் வெடிக்காமல் இருக்க துணை ராணுவத்தினர், மாநிலக் காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். - ஏஎஃப்பி

கோல்கத்தா: மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்தது. அந்தத் தேர்தலையொட்டி மாநிலம் முழுதும் நடந்த வன்முறைச் சம்பவங்களில் கிட்டத்தட்ட 10 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.

கடந்த சனிக்கிழமை நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 30 மாவட்டங்களில் 20 மாவட்டங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன. அப்போது வாக்குச்சவாடிகளில் உள்ள வாக்குச் சீட்டுகள் சூறையாடப்பட்டன.

இந்த வன்முறைச் சம்பவங்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே பொறுப்பு என்று பாஜக, மேற்கு வங்க காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குறைகூறுகின்றன.

அதையடுத்து தேர்தல் முடிந்து இரண்டே நாள்களில் ஐந்து மாவட்டங்களில் உள்ள 697 வாக்குச்சவாடிகளில் மீண்டும் தேர்தல் நடத்த முடிவுசெய்த மாநிலத் தேர்தல் ஆணையம், சர்ச்சைக்குரிய ஐந்து மாவட்டங்களிலும் திங்கள்கிழமை மீண்டும் தேர்தல் நடத்தியது.

காலை 7.00 மணிக்குத் தொடங்கிய மறுதேர்தல் எவ்விதச் சிக்கலுமின்றி மாலை 5.00 மணி வரை நடந்துமுடிந்தது. இந்நிலையில் கூச்பெஹார் மாவட்டத்தில் மீண்டும் புதிதாக வன்முறை வெடித்துள்ளது.

புருலியா, பர்பும், ஜால்பாய்குரி, நடியா மற்றும் பர்கனாஸ் ஆகிய மாவட்டங்களில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டதாக மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறப்பட்டது.

நேற்றிரவு காங்கிரஸ் தொண்டர் ஒருவர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி காங்கிரஸ் கட்சியினர் அட்டூழியம் செய்ததாகக் கோரி திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் காங்கிரஸ் - திரிணமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வாக்காளர்களுக்குப் பதில் மாநிலத் தேர்தல் ஆணைய அதிகாரிகளே வாக்களித்திருப்பர் என்று பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

அந்த அதிகாரிகள் திரிணாமூல் காங்கிரசுக்கு ஆதரவாக வாக்களித்திருக்கக்கூடும் என்று பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் காகென் முர்மு தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் இதுபோன்று நடந்துள்ளது என்று கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்