தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காய்கறி விலையேற்றம்: சமாளிப்பது குறித்து முதலமைச்சர் நடவடிக்கை

1 mins read
925d8daa-7bf0-433d-b79f-f09d930180e8
சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தை. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தின் பல பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக காய்கறி வரத்து வெகுவாகக் குறைந்து உள்ளது. அதையடுத்து காய்கறிகளின் விலை உச்சத்தை எட்டியுள்ளது.

குறிப்பாக சின்ன வெங்காயமும் தக்காளியும் கிடைப்பது அரிதாக உள்ளது. அப்படியே கிடைத்தாலும் அவற்றின் விலையைக் கண்டு ஒதுங்கிநிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கூட்டுறவுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காய்கறி உள்ளிட்ட அத்தியவாசயப் பொருள்களின் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், உழவர் சந்தைகளில் காய்கறிகளின் விற்பனையை அதிகப்படுத்த வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் நியாயவிலைக் கடைகளில் கட்டுப்படியாகும் விலையில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

தேவை ஏற்பட்டால் நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் கொள்முதல்களை மேற்கொள்ளலாம் என்று அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கினார்.

அத்தியாவசியப் பொருட்கள் பதுக்கப்படுவதைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுத்து விலைவாசியைக் கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.

சந்தை விலையை விட, குறைந்த விலையில் மக்களுக்கு காய்கறிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

மேலும், தொற்றுக்காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையைப்போல் நடமாடும் காய்கறிக் கடைகளைத் தொடங்கலாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்