பரிசோதனையில் இரட்டைக் குழந்தை, பிரசவத்தில் ஒரே குழந்தை எனப் புகார்

பரிசோதனையில் இரட்டைக் குழந்தை, பிரசவத்தில் ஒரே குழந்தை எனப் புகார்

2 mins read
984d655d-e683-4f2f-bdd2-85d431f673ba
படம்: - தமிழ் முரசு

லக்னோ: மருத்துவமனைகளின் செயல்பாடுகள் குறித்து அவ்வப்போது புகார்கள் எழுந்தாலும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் விசித்திரமான புகார் ஒன்று எழுப்பப்பட்டுள்ளது.

அங்குள்ள சித்தார்த் நகர் மாவட்டத்தின் முஹானா பகுதியில் வசிப்பவர் அனுப் குமார். இவரது மனைவி கருத்தரித்த நிலையில், வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இவரும் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் மனைவியைக் காட்டி வந்துள்ளார்.

அப்போது ஒருகட்டத்தில் அனுப்பின் மனைவிக்கு ‘அல்ட்ராசவுண்ட்’ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பெண்ணின் கருவில் இரட்டை குழந்தைகள் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனைக் கேட்டு வியப்புற்ற உறவினர்கள் மற்றொரு இடத்திலும் போய் பரிசோதனை செய்தனர். அங்கும் இரட்டைக் குழந்தை உள்ளதாக சோதனை முடிவு தெரிவித்தது.

நம் வீட்டிற்கு இரட்டை சந்தோஷம் வரப்போகிறது என அனுப் குமாரும் உறவினர்களும் ஆர்வத்துடன் இருந்தனர். இந்நிலையில், கடந்த வாரம் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. வழக்கமாகக் காட்டும் தனியார் மருத்துவமனயில் அவர் அனுமதிக்கப்பட்டார். பிரசவம் நடைபெற்ற நிலையில், ஆர்வத்துடன் காத்திருந்த குடும்பத்திற்கு அதிர்ச்சி செய்தி வந்தது. பிரசவத்தில் ஒரு குழந்தைதான் பிறந்தது, பெண்ணின் கருவில் ஒரு குழந்தைதான் இருந்தது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தார் பரிசோதனையில் இரட்டைக் குழந்தை எனக் கூறப்பட்ட நிலையில், எப்படி ஒரு குழந்தைதான் இருக்கும் என கேள்வி எழுப்பத் தொடங்கினர். ஒரு குழந்தையை மருத்துவமனை திருடிவிட்டது எனப் புகார் கூறி, போராட்டம் செய்தனர். தொடர்ந்து அவர்களை மருத்துவமனை நிர்வாகம் விரட்டி அடித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அனுப் குமார் இந்த விவகாரம் குறித்து மாவட்டத் தலைமை மருத்துவ அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் விசாரணை நடத்தி குற்றம் நடந்திருந்தால் உரிய நீதி வழங்கப்படும் என அதிகாரி உறுதியளித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்