கோல்கத்தா: மேற்கு வங்காள உள்ளாட்சித் தேர்தலில், அந்த மாநிலத்தை ஆளும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் தொடக்கம் முதலே கிடுகிடுவென வெற்றிகளைக் குவித்ததாகத் தகவல்கள் தெரிவித்தன.
கிராமப் பஞ்சாயத்து இடங்களில் 8,300க்கும் மேற்பட்ட வெற்றி அந்தக் கட்சிக்குக் கிடைத்தது என்றும் சுமார் 3,000 இடங்களில் அது முன்னணியில் இருந்ததாகவும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நேரத்தில் வெளியான தகவல்கள் தெரிவித்தன.
எதிர்க்கட்சியான பாஜக 1,714 இடங்களைப் பிடித்தது. இதர 734 இடங்களில் அது முன்னணி வகித்ததாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவல் தெரிவித்தது.
சிபிஐ(எம்) 241 தொகுதிகளில் வென்றது. 627 கிராமப் பஞ்சாயத்து இடங்களில் அது முன்னணியில் இருந்தது. அதோடு சேர்ந்து போட்டியிட்ட காங்கிரஸ் 362 கிராமப் பஞ்சாயத்து இடங்களைப் பிடித்தது. இதர 215 இடங்களில் காங்கிரஸ் முன்னணியில் இருந்ததாக ஆணையம் தெரிவித்தது.
மொத்தம் 73,887 உள்ளாட்சி இடங்களுக்கு 2.06 லட்சம் வாக்காளர்கள் போட்டிபோடுகிறார்கள். அவர்களை வாக்களித்து தேர்ந்து எடுக்க மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்று இருந்தார்கள். 80% வாக்காளர்கள் வாக்களித்து இருந்தனர்.
வரலாறு காணாத வன்செயலுடன் நடந்த மேற்கு வங்காள உள்ளாட்சித் தேர்தல் வாக்குகள் செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டன.
வாக்குகள் எண்ணப்பட்டபோதும் வன்செயல் வெடித்தது. அந்த மாநிலத்தில் இம்மாதம் 8ஆம் தேதி உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடந்தது.
தேர்தலின்போது பல இடங்களிலும் வன்முறை வெடித்தது. வாக்குப்பெட்டிகள் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டன. தேர்தல் அதிகாரிகள் தாக்கப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
பல்வேறு கட்சித் தொண்டர்கள் கொல்லப்பட்டனர். மொத்தம் 45 பேர் மாண்டனர். வாக்குப் பதிவு நாளன்று மட்டும் 18 பேர் உயிர்போனது. 697 வாக்குச்சாவடிகளில் வன்செயல் நடந்ததால் மறுதேர்தல் நடத்தப்பட்டது.
கோல்கத்தா நகர ஹவுரா பகுதியில் வாக்குகள் எண்ணப்பட்ட ஒரு மையத்திற்குள் ஒரு கும்பல் திடீரென நுழைய முயன்றதை அடுத்து காவல்துறை அதிகாரிகள் தடியடி நடத்தி அவர்களை விரட்டினர்.
இதனிடையே, மேற்கு வங்காளத்தில் ஜனநாயகம் செத்துவிட்டது என்று பாஜக பேச்சாளர் சாம்பிட் பத்ரா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

