புதுடெல்லி: கனடாவின் டொரொண்டோவில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த மகேஷ் சிங் பண்டிட் எனும் ஆடவர்மீது டெல்லி காவல்துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
நேப்பாளத்தைச் சேர்ந்த அவர், வேறு இருக்கையில் அமர்ந்தது மட்டுமன்றி விமானச் சிப்பந்திகளைத் திட்டியதாகவும் கூறப்பட்டது.
விமானி எச்சரித்த பிறகே மகேஷ் சிப்பந்திகளைத் திட்டுவதை நிறுத்தியதாகப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விமானக் கழிப்பறைக்குள் அவர் சிகரெட் பற்றவைக்கும் கருவியுடன் பிடிபட்டார்.
“நான் கதவைத் திறந்தபோது என்னைத் தள்ளிவிட்டு தனது இருக்கைக்கு அவர் ஓடினார். அவரைத் தடுத்து நிறுத்த முயன்றேன். என்னையும் திட்டினார். பின்னர் கழிப்பறைக் கதவை உடைத்தார். விமானியின் உத்தரவுப்படி பயணிகள் சிலரின் உதவியுடன் அவரைக் கட்டுப்படுத்தினோம்,” என்று விமானச் சிப்பந்திகளின் மேற்பார்வையாளர் அந்தப் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.