பெங்களூரு: தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இரு உயரதிகாரிகளை அலுவலகத்துக்குள் புகுந்து வெட்டிக்கொன்றவர்களை கர்நாடக மாநில காவல்துறை கைது செய்தது.
பட்டப்பகலில் இந்தக் கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த பணீந்திரா, வினுகுமார் ஆகிய இருவரும் பெங்களூருவில் இயங்கி வரும் ஏரோனிக்ஸ் இண்டர்நெட் என்ற நிறுவனத்தின் உயரதிகாரிகள் ஆவர்.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று இருவரும் தங்கள் அலுவலகத்தில் பணியைக் கவனித்துக் கொண்டிருந்தபோது, திடீரென மூன்று அடையாளம் தெரியாத ஆள்கள் கையில் பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்தனர். பின்னர் பணீந்திராவையும் வினுகுமாரையும் அக்கும்பல் சரமாரியாக வெட்டிச் சாய்த்தது.
இந்தச் சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு பரபரப்பான தகவல்கள் வெளியான நிலையில், கொலையில் தொடர்புடைய இருவரை காவல்துறை கைது செய்தது. மற்றொருவர் தேடப்பட்டு வருகிறார்.
கொலைக்கான பின்னணி குறித்து முழு விவரங்களும் வெளியாகவில்லை.
கொலை செய்யப்பட்ட பணீந்திராவும் வினுகுமாரும், ஃபெலிக்ஸ் என்பவருடன் இணையச்சேவை வழங்கும் நிறுவனத்தில் இணைந்து பணியாற்றி வந்தனர்.
கடந்த ஆண்டு பணீந்திராவும், வினுகுமாரும் பிரிந்து சென்று வேறொரு நிறுவனத்தை தொடங்கினர். இதனால் ஃபெலிக்ஸ் நடத்தி வந்த நிறுவனத்தின் வருவாய் குறைந்துபோனது.
தொடர்புடைய செய்திகள்
இதனால் கடும் கோபத்தில் இருந்த அவர், திட்டமிட்டு பணீந்திராவையும் வினுகுமாரையும் கொல்ல திட்டமிட்டிருக்கக்கூடும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

