சென்னை: சென்னையில் புதன்கிழமை நள்ளிரவு கனமழை பெய்தது.
சூறைக்காற்று, இடி, மின்னலுடன் கனமழை பெய்ததால் சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது.
அதனால் சில விமானங்கள் வானில் வட்டமடித்துக் கொண்டிருந்ததாகவும் அனுமதி வழங்கப்பட்டதும் அவை ஒன்றன்பின் ஒன்றாகத் தரையிறங்கியதாகவும் ஊடகங்கள் கூறின.
ஜெர்மனியில் இருந்து சென்னை சென்ற விமானம் பெங்களூருக்குத் திருப்பி விடப்பட்டது.
ஃபிராங்க்பார்ட் நகரில் இருந்து, 342 பயணிகளுடன் புதன்கிழமை நள்ளிரவு, 12:05 மணிக்கு சென்னை அனைத்துலக விமான நிலையத்தில் தரை இறங்குவதற்காக லூஃப்தான்ஸா ஏர்லைன்சின் விமானம் சென்றது. அந்த நேரத்தில் பலத்த சூறைக்காற்று வீசியது; இடி, மின்னலுடன் மழை பெய்ததால், விமானம் சென்னையில் தரையிறங்க முடியவில்லை. எனவே சென்னை விமான நிலையக் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், அவ்விமானத்தை பெங்களூருக்கு திருப்பி அனுப்பினார்கள்.
மேலும், பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இருந்து 286 பயணிகளுடன் சென்னை சென்ற ஏர் பிரான்ஸ் விமானம், சிங்கப்பூரில் இருந்து 269 பயணிகளுடன் சென்னை சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம், திருச்சி, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் இருந்து சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்குச் சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் போன்றவை சென்னையில் தறையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து பறந்துகொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
மழை ஓய்ந்ததும், அவ்விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்னை விமான நிலையத்தில் தறையிறங்கின. பெங்களூருக்குத் திருப்பி அனுப்பப்பட்ட லூஃப்தான்ஸா ஏர்லைன்ஸ் விமானம், வியாழக்கிழமை காலை 8மணிக்கு மீண்டும் சென்னை சென்று சேர்ந்தது.
சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய கோலாலம்பூர், பேங்காக், ஹாங்காங், சிங்கப்பூர், பாரிஸ், ஃபிராங்க்பார்ட், இலங்கை உள்ளிட்ட 8 அனைத்துலக விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.
தொடர்புடைய செய்திகள்
சென்னையில் இருந்து புறப்பட இருந்த 12 விமானங்கள் ஏறக்குறைய 30 நிமிடங்கள் முதல் 3 மணி நேரம் வரை தாமதமாகப் புறப்பட்டதாகக் கூறப்பட்டது.
தற்போது விமானச் சேவை வழக்க நிலைக்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

