புதுடெல்லி: இந்தியத் தலைநகர் டெல்லியில் கடந்த அறுபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த புதன்கிழமை யமுனை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
டெல்லியில் வாஸிர்பாத், சந்திரவால் மற்றும் ஒக்லா ஆகிய இடங்களில் உள்ள தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அதனால் டெல்லியின் பல பகுதிகளில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
மேலும், வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிப்பதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
யமுனை ஆற்றில் வியாழக்கிழமை காலை 9 மணி நிலவரப்படி அந்த ஆற்றில் 208.51 மீட்டர் அளவுக்கு வெள்ள நீர் பாய்ந்து வருகிறது. இது மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
யமுனை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அதன் சுற்றுவட்டாரச் சாலைகளைத் தண்ணீர் ஆக்கிரமித்துள்ளது.
யமுனை ஆற்றின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ள நீர் புகும் அபாயம் உள்ளது. எனவே, அதுபோன்ற ஆபத்தான சாலைகளை மக்கள் தவிர்க்க வேண்டும். அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க போர்க்கால நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. எனவே, பொதுமக்கள் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு ஒத்துழைப்புத் தரவேண்டும் என முதல்வர் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.
டெல்லி தலைமைச் செயலகம், காலிகாட் மந்திர், மகாத்மா காந்தி பார்க் உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அப்பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் முடங்கிப் போயுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
வெள்ளநீர் சூழ்ந்துள்ள பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளிலும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை மூட முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். அத்துடன், இந்த நெருக்கடி காலத்தைக் கடக்க மக்கள் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வது மிக முக்கியம் என்று அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.