தலையில் முடி இல்லை; ரகசியம் காக்க முடியவில்லை

1 mins read
4acc2dc1-3bf7-4287-b7ab-65a2603dfa29
தலையில் முடி இல்லை என்பதை மறைத்து, ‘விக்’ அணிந்து திருமணம் செய்ய முயன்றவரின் குட்டு வெளிப்பட்டது. - படம்: இந்திய ஊடகம்

பாட்னா: பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் உள்ள இக்பால்பூர் பகுதியைச் சேர்ந்த இளையருக்கும் பஜவுரா கிராமத்தைச் சேர்ந்த ஓர் இளம்பெண்ணுக்கும் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் எதிர்பாராத திருப்பம்.

பாரம்பரிய வழக்கப்படி மணமகன் ‘செஹ்ரா’ எனப்படும் தலையை மறைக்கும் கவசம் அணிவது அங்கு வழக்கம். அதன்படி தலைக்கவசம் அணிய முயன்றபோது மணமகனுக்குத் தலையில் முடி இல்லை என்பது அம்பலமானது.

மணமகன் ‘விக்’ வைத்து தனது வழுக்கைத் தலையை மறைத்து ஏமாற்றித் திருமணம் செய்ய முயன்றதை அறிந்து, மணமகள் குடும்பத்தினர் அதிர்ச்சியும் ஆவேசமும் அடைந்தனர்.

மணமகனை அவர்கள் சரமாரியாக அடித்து, உதைத்தனர். மணமகன் தன்னை மன்னித்து விடுமாறு கைகளைக் கூப்பிக் கெஞ்சியபோதும் மணமகள் குடும்பத்தினர் மசியவில்லை.

இதற்கிடையே, அந்த மணமகன் ஏற்கெனவே திருமணமானவர் என்பதும் முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணத்திற்கு ஏற்பாடு செய்ததும் தெரியவந்தது.

இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த மணமகளின் குடும்பத்தார், தொடர்ந்து அவரைத் தாக்கினர். சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.

குறிப்புச் சொற்கள்