பாட்னா: பீகார் மாநிலத்தில் அரசுக்கு எதிராக பாஜகவினர் நடத்திய போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய தடியடியில் அக்கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான அரசில் நடைபெறும் ஊழலைக் கண்டித்தும், ஆசிரியர் நியமனத்தில் குடியுரிமை கொள்கை திருத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பாஜகவினர் மிகப்பெரிய அளவிலான போராட்டத்துக்கு வியாழக்கிழமை ஏற்பாடு செய்திருந்தனர்.
தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்திலிருந்து பீகார் சட்டப்பேரவை நோக்கி மிகப்பெரிய பேரணியை பாஜகவினர் வியாழக்கிழமை ஏற்று நடத்தினர். அப்போது கூட்டத்தைக் கலைக்க காவல்துறையினர் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியதுடன், தண்ணீரைப் பீய்ச்சியடித்து தடியடி நடத்தினர்.
இதில், பாஜக தொண்டர்கள் பலர் காயமடைந்தனர். குறிப்பாக, ஜெகந்நாபாத் மாவட்ட பாஜக பொதுச் செயலர் ஜி.எஸ். விஜயகுமார் சிங் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து பாஜக எம்பியும், பீகாரின் முன்னாள் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடி டுவிட்டரில், “பீகார் காவல்துறையினரின் மிக கொடூரமான தாக்குதலில் ஜெகந்நாபாத் மாவட்ட தலைவர் விஜய் குமார் சிங் உயிரிழந்தார்,” என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், பாட்னா மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் கூறுகையில், “பாஜக தலைவரின் இறப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவமனைக்கு அவர் கொண்டுவரப்படும் போது உடலின் வெளிப்புறத்தில் காயங்கள் எதுவும் காணப்படவில்லை. பிரேத பரிசோதனை முடிந்த பிறகே இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும்,” என்றார்.

