மும்பை: நாடு முழுவதும் தக்காளி விலை உச்சத்தில் உள்ள நிலையில், தக்காளி விவசாயி ஒருவர் ஒரே மாதத்தில் 1 கோடி ரூபாய்க்குமேல் வருவாய் ஈட்டியுள்ளார்.
மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் நாராயண்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் துகாராம் பஹொஜி கெய்கர். இவருக்கு 18 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதில் 12 ஏக்கரில், துகாராம் தக்காளி பயிரிட்டுள்ளார். அவரது மகன் ஈஸ்வரும் மருமகள் சோனாலியும் தக்காளி விவசாயத்தில் துகாராமுக்கு உதவினர்.
தற்போது தக்காளி கிலோ 100 ரூபாய்க்குமேல் விற்கப்படும் நிலையில் துகாராம் குடும்பத்தினருக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 13,000 பெட்டிகளில் தக்காளியை இவர்கள் விற்பனை செய்துள்ளனர். ஒரு பெட்டியில் 20 கிலோ தக்காளி இருக்கும்.
ஒரு பெட்டி சராசரியாக 1,000 ரூபாய் முதல் 2,400 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. இதன் மூலம் இக்குடும்பத்தினர் ஒரு மாதத்தில் 1 கோடியே 50 லட்ச ரூபாய் ($244,020) வருமானம் ஈட்டியுள்ளார்.
சனிக்கிழமை மட்டும் ஒரு பெட்டி தக்காளி 2,100 ரூபாய் விற்றது. ஏறக்குறைய 900 தக்காளிப் பெட்டிகளை விற்றதில் 18 லட்ச ரூபாய் வருவாய் கிட்டியதாக துகாராம் குடும்பத்தினர் கூறினர்.

