சந்திரயான்-3 வெற்றியைக் கொண்டாடும் இந்தியா

சந்திரயான்-3 வெற்றியைக் கொண்டாடும் இந்தியா

2 mins read
989340c2-e665-4e73-b9f2-566a8fbce2b8
சந்திரயான்-3 விண்கலம் நிலவுக்கு 40 முதல் 42 நாட்கள் பயணிக்கும் என்று இஸ்ரோ தெரிவித்தது. - படம்: இபிஏ
multi-img1 of 2

புதுடெல்லி: எதிர்காலத்தில் நிலவில் மனிதன் வாழ்வதற்கான சாத்தியம் இருக்கிறதா என்பதை சந்திரயான்-3 நிச்சயம் கண்டறிந்து உலகத்திற்குச் சொல்லும் என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறை துணை அமைச்சர் ஜிதேந்திர சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நமக்கு முன்னரே மற்ற நாடுகள் விண்வெளிப்பயணத்தைத் தொடங்கி, அங்கு கால்பதித்த பின்னர் நாம் விண்வெளிப்பாதையில் அடியெடுத்து வைத்துள்ளோம். இருப்பினும் முன்னெப்பெதும் அறிந்திராத அரிய பல தகவல்களை சந்திரயானால் கிடைக்கப்பெற்றோம்.

இப்போது விண்ணில் பாய்ந்துள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் மூலம் நிலவைப் பற்றி மேலும் அதிகமான ஆய்வுத் தகவல்களைப் பெறவுள்ளோம். அதன்மூலம் நிலவில் மனிதன் வாழ்வதற்கான சாத்தியம் உள்ளதா என்பதை இந்த உலகம் அறிந்துகொள்ளப்போகிறது. அதையடுத்து விண்வெளித்துறையின் உச்சத்தில் மிளிரப்போகிறது இந்தியா என்று அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

சந்திரயான்-3 விண்கலம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.35 மணிக்கு எல்விஎம்-3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.  

புறப்பட்ட 16 நிமிடங்களில், திட்டமிட்ட புவி நீள்வட்ட சுற்றுப்பாதையில் விண்கலம் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

சந்திரயான்-3  வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து இஸ்ரோவுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

“சந்திரயான்-3 திட்டத்தின் முதல்கட்ட வெற்றியைப் பதிவு செய்துள்ளோம். இதற்காக உழைத்த விஞ்ஞானிகள் அனைவருக்கும் நன்றி. விண்வெளி அறிவியல் ஆய்வுத் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து ஊக்கம் அளித்து வருவதால், இஸ்ரோவால் தொடர்ந்து ஆராய்ச்சிகளை முன்னெடுக்க முடிகிறது,” என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

விண்வெளி வரலாற்றில் இந்தியா ஒரு புதிய அத்தியாயத்தை எழுதுகிறது. ஒவ்வொரு இந்தியரின் கனவுகளையும் லட்சியங்களையும் உயர்த்தி, உயரமாக உயர்கிறது. இந்த முக்கியமான சாதனை நமது விஞ்ஞானிகளின் அயராத அர்ப்பணிப்புக்கு ஒரு சான்று. அவர்களது ஆற்றல் மற்றும் அறிவுக்கு தலைவணங்குகிறேன்.

இந்திய விண்வெளித் துறையைப் பொறுத்தவரை 2023-ம் ஆண்டு ஜூலை14ஆம் தேதி எப்போதும் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்டு இருக்கும் என்று அதிபர் திரவுபதி முர்முவும் பிரதமர் நரேந்திர மோடியும் வாழ்த்து தெரிவித்தனர்.

பாலிவுட் பிரபலங்களான நடிகர் அக்சய் குமார், சுனில் ஷெட்டி, அஜய் தேவ்கன், ரித்திஷ் தேஷ்முக் ஆகியோரும் வாழ்த்துதெரிவித்தனர். 

இப்போது ஏவப்பட்டுள்ள சந்திரயான்-3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சந்திரயான்-3 விண்கலம் நிலவுக்கு 40 முதல் 42 நாட்கள் பயணிக்கும். உந்துவிசை கலன் ஆக.1ஆம் தேதி நிலவின் சுற்றுப்பாதையில் செலுத்தப்படும். உந்துவிசை கலனில் இருந்து லேண்டர் ஆகஸ்ட் 17ஆம் தேதி பிரிந்து நிலவில் குறைந்த வேகத்தில் தரையிறங்க தொடங்கும். ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை 5.45 மணி அளவில் லேண்டர் நிலவில் தரையிறக்கப்படும் என்று இஸ்ரோ தெரிவித்தது. 

இதுவரை ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளே நிலவில் விண்கலத்தை தரையிறக்கியுள்ளன. இப்போது நான்காவது நாடாக இந்தியா அனுப்பியுள்ளது. இந்தத் திட்டம் வெற்றிபெற்றால் தென்துருவத்தில் விண்கலத்தைத் தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெறும்.

Watch on YouTube
குறிப்புச் சொற்கள்