புதுடெல்லி: புதுடெல்லியில் டெல்லி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தமிழ்நாட்டின் முன்னாள் முதல் அமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் 121ஆவது பிறந்தநாள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் கலந்துகொண்டார்.
காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியின் சேனா பவனுக்கு அருகிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தி மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அனைத்து இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் டெல்லி மாநிலக் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அஜய் சவுத்ரி ஆகியோர் கலந்துகொண்டனர்.
டெல்லி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அதன் துணைத் தலைவர் பெ.இராகவன், பொதுச் செயலாளர் இரா.முகுந்தன், செயற்குழு உறுப்பினர் பி.அமிர்தலிங்கம் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் டெல்லி வாழ் தமிழ் மக்கள் பலரும் ஆர்வமுடன் பெருமளவில் பங்கேற்றனர்.
இந்நிலையில், கர்ம வீரர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நேற்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
“இந்தியாவின் வளர்ச்சிக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த உன்னத மனிதர் காமராஜருக்கு அவரது பிறந்தநாளில் மரியாதை செலுத்துகிறேன். சமூக அதிகாரமளிப்புக்கு அவர் அளித்த முக்கியத்துவம் நம் அனைவருக்கும் வழிகாட்டும் சக்தியாக உள்ளது. வறுமை ஒழிப்பு மற்றும் பொது நலன் குறித்து அவரது தொலைநோக்கு பார்வையை நிறைவேற்றுவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்,” என பிரதமர் மோடி, தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.


