தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மகாராஷ்டிரா: அஜித் பவாருக்கு முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன

2 mins read
18eac607-c5fd-4204-a42b-8cda40f6a25b
மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வர் அஜித் பவார் - படம்: ஊடகம்

மும்பை: கடந்த வெள்ளிக்கிழமை மாற்றியமைக்கப்பட்ட மகாராஷ்டிர அமைச்சரவையில் நிதித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார் துணை முதல்வர் அஜித் பவார். தேசியவாத காங்கிரசின் மூத்த தலைவர் அஜித் பவாருக்கு நிதி, திட்டமிடல் ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.

அவர் கடந்த வெள்ளிக்கிழமை நிதித்துறை அலுவலகத்தில் தனது பணியைத் தொடங்கினார். மேலும் அவரது அணியைச் சேர்ந்த அமைச்சர்களுக்குப் பொது விநியோகம், பேரிடர் மேலாண்மை, விளையாட்டு, மகளிர்- குழந்தைகள் நலன், சுகாதாரம் உள்ளிட்ட துறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

முன்பு சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் அமைந்திருந்த மகா விகாஸ் அகாதி கூட்டணி அரசிலும் அஜித் பவார் இதே துறையை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதும் அதே துறையை கைப்பற்றியுள்ளார்.

முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவிடம் பொது நிர்வாகம், ஊரக வளர்ச்சி, தகவல் தொழில்நுட்பம், போக்குவரத்து, சமூக நீதி, சுற்றுச்சூழல், சுரங்கம் உள்ளிட்ட துறைகள் உள்ளன.

துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர பட்னாவிஸிடம் உள்துறை, சட்டம்-நீதி, நீர்வளம், எரிசக்தி உள்ளிட்ட துறைகள் உள்ளன. துணை முதல்வர் அஜித் பவாரின் ஆதரவாளர்களுக்கு முக்கிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதால் முதல்வர் ஷிண்டே அணியை சேர்ந்த எம்எல்ஏக்கள், பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இடையே அதிருப்தி நிலவுவதாகக் கூறப்படுகிறது.

அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட சில மணி நேரத்தில் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் வீட்டுக்குச் சென்றார். சரத் பவாரின் மனைவி பிரதிபா அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். அவரைச் சந்தித்து நலம் விசாரிப்பதற்காக அஜித் பவார் சரத் பவார் வீட்டுக்குச் சென்றார் என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்