தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஏர் இந்தியா விமானத்தில் அதிகாரியைத் தாக்கிய பயணி

1 mins read
597ef719-e85a-4957-87ee-38563e4a52e9
விமானம் தரையிறங்கியதும் அப்பயணி பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவரைப் பயணி ஒருவர் தாக்கிய சம்பவம் இம்மாதம் 9ஆம் தேதி சிட்னியில் இருந்து புதுடெல்லி சென்ற AI301 விமானத்தில் நிகழ்ந்தது.

சந்தீப் வர்மா என்ற அந்த அதிகாரி ‘பிஸ்னஸ்’ பிரிவில் முன்பதிவு செய்திருந்தார். ஆயினும், விமானத்தின் முன்பகுதியில் இருந்த சில இருக்கைகளுக்கு சேவை வழங்க முடியாமல் போனதால் அவர் ‘எக்கானமி’ பிரிவில் பயணம் செய்ய வேண்டியதாயிற்று.

அப்போது, முறையின்றி நடந்துகொண்ட சக பயணி ஒருவரை ஒழுங்காக நடந்துகொள்ளுமாறு வர்மா அறிவுறுத்தினார். அதனால் ஆத்திரமடைந்த அப்பயணி வர்மாவை அறைந்ததோடு, அவரது கையைப் பிடித்து முறுக்கியதாகவும் கூறப்பட்டது.

இதனையடுத்து, விமானம் டெல்லியில் தரையிறங்கியதும் அப்பயணி பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் அப்பயணி மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்துக் கருத்துரைத்த ஏர் இந்தியா நிறுவனம், “சம்பவம் தொடர்பில் விமானப் போக்குவரத்து இயக்ககத்திற்குத் தகவல் தரப்பட்டுவிட்டது. தவறான நடத்தைக்கு எதிராக ஏர் இந்தியா உறுதியான நிலைப்பாட்டை எடுக்கும். சட்டரீதியாக இப்பிரச்சினையை அணுகுவோம்,” என்று தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்