இந்திய எம்எல்ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.13.63 கோடி; 44% உறுப்பினர்கள்மீது வழக்கு

2 mins read
c55d67ec-3a56-47ae-92ee-e64792993336
இந்தியாவில் 44% எம்எல்ஏக்கள் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளதாகவும் மாநில சட்டசபைகளில் ஓர் எம்எல்ஏவின் சராசரி சொத்து மதிப்பு ரூ.13.63 கோடி எனவும் ஆய்வு தெரிவிக்கிறது. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இந்தியா முழுவதும் இப்போது பதவியில் இருக்கும் மாநில சட்டமன்ற உறுப்பினர்களில் (எம்எல்ஏக்கள்) 44 விழுக்காட்டினர் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன.

மாநில சட்டசபைகளில் பதவியில் உள்ள ஒரு எம்எல்ஏவின் சராசரி சொத்து மதிப்பு ரூ.13.63 கோடி எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் என்ற அமைப்பும் தேசிய தேர்தல் கண்காணிப்பு மையம் என்ற அமைப்பும் இணைந்து, நாடு முழுவதும் உள்ள மாநில சட்டமன்றங்கள், யூனியன் பிரதேசங்களில் இப்போது பதவியில் இருக்கும் எம்எல்ஏக்களின் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்தன. இதன் மூலம் இந்த நிலவரம் தெரியவந்துள்ளது.

மொத்தம் 28 மாநில சட்டசபைகள், இரண்டு யூனியன் பிரதேசங்களில் பதவியில் உள்ள 4,033 எம்எல்ஏக்களில் 4,001 பேரை இந்த ஆய்வு உள்ளடக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்களில் 1,136 எம்எல்ஏக்கள் (28%) மீது கொலை, கொலை முயற்சி, கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட கடுமையான குற்ற வழக்குகள் இருப்பதாக ஆய்வு கூறுகிறது.

அதிகபட்சமாக கேரளாவில்தான் மொத்தம் உள்ள 135 எம்எல்ஏக்களில் 95 பேர் (70% ) மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன. இதேபோல், பீகாரில் 242 எம்எல்ஏக்களில் 161 பேர் (67%), டெல்லியில் 70 எம்எல்ஏக்களில் 44 பேர் (63%), மராட்டியத்தில் 284 எம்எல்ஏக்களில் 175 பேர் (62%), தெலுங்கானாவில் 118 எம்எல்ஏக்களில் 72 பேர் (61%), தமிழகத்தில் 224 எம்எல்ஏக்களில் 134 பேர் (60% ) மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன.

மொத்தம் 114 எம்எல்ஏக்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் இருப்பதாகவும் அவர்களில் 14 பேர் மீது பாலியல் கொடுமை வழக்கு உள்ளதாகவும் ஆய்வு கூறுகிறது.

எம்எல்ஏக்களின் சொத்துகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதன்படி மாநில சட்டசபைகளில் ஒரு எம்எல்ஏவின் சராசரி சொத்து மதிப்பு ரூ.13.63 கோடி என கண்டறியப்பட்டுள்ளது.

வழக்குகள் உள்ள எம்எல்ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.16.36 கோடியாகவும் குற்ற வழக்குகள் இல்லாதவர்களின் சொத்து மதிப்பு ரூ.11.45 கோடியாகவும் உள்ளதாக ஆய்வு கூறுகிறது.

குறிப்புச் சொற்கள்