கொழும்பு: இந்திய ரூபாயைப் பொது நாணயமாகப் பயன்படுத்த தயார் என்று இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்து இருக்கிறார்.
இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்ற இந்திய தலைமை நிர்வாக அதிகாரி மன்றத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே உரையாற்றினார்.
இந்தியப் பொருளியல் பிரதமர் மோடியின் தலைமையின்கீழ் வேகமாக வளர்ந்து வருகிறது என்றும் இப்போது இந்தியாவுக்கான காலம் கனிந்து இருக்கிறது என்றும் அதிபர் ரணில் குறிப்பிட்டார்.
ஜப்பான், கொரியா, சீனா ஆகிய நாடுகளுடன் 75 ஆண்டுகளுக்கு முன் கிழக்கு ஆசியா குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டது. அதைத் தொடர்ந்து இப்போது இந்தியாவுக்கான காலம் கனிந்து இருக்கிறது என்று அதிபர் கூறினார்.
அந்த மன்றத்தில் உரையாற்றிய இந்தியத் தலைமை நிர்வாக அதிகாரி டிஎஸ் பிரகாஷ், இலங்கை பொருளியலில் இந்திய ரூபாயை மேம்படுத்தும்படி இலங்கை அதிபருக்கு அழைப்பு விடுத்தார்.
அதற்குப் பதிலளித்துப் பேசிய அதிபர் ரணில், ‘‘இந்திய ரூபாய் அமெரிக்க டாலருக்கு நிகரான பொதுவான நாணயமாக மாறினால் அதை பயன்படுத்துவதில் இலங்கைக்கு எந்த தயக்கமும் இல்லை. அதை எப்படி செய்வது என்று நாம் ஆராய வேண்டும்,’’ என்று தெரிவித்தார்.
இலங்கை அதிபர் ரணில் இரண்டு நாள் பயணமாக அடுத்த வாரம் இந்தியா செல்கிறார்.
வெளியே இடம்பெறக்கூடிய மாற்றங்களைக் கைக்கொள்ளும் போக்கை நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அதிபர் ரணில், வளர்ச்சி காணும் உலகத்துடன் இந்தியாவும் வேகமாக வளர்ந்து வருகிறது என்றும் குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின்கீழ் இந்தியா இப்போது அதிவேகமாக முன்னேறி வருகிறது என்றும் குறிப்பிட்டார்.