தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சந்திரயான் சுற்று வட்டப்பாதை உயர்த்தப்பட்டது; நிலவை நோக்கி சுமுகமாக பயணிக்கும் இந்திய விண்கலம்

2 mins read
387c77a9-ff63-48d6-930c-1ca3a30d4004
சந்திரயான்-3 சுற்று வட்டப் பாதை உயரம் மேலும் மூன்று முறை உயர்த்தப்படவிருக்கிறது. - படம்: இஸ்ரோ

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான (இஸ்ரோ), சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப் பாதையை இரண்டாவது முறையாக வெற்றிகரமாக உயர்த்தியிருக்கிறது.

இதன் மூலம் சந்திரயானின் நிலவை நோக்கிய பயணம் துல்லியமாக அமைக்கப்பட்டுள்ளது.

பூமியின் புவியீர்ப்பு விசையிலிருந்து விடுவிக்கவும் அதன் நிலவை நோக்கிய பயணம் சீராக இருக்கவும் சந்திரயான் துல்லியமான உயரத்துக்கு உயர்த்தப்படும். இதற்காக மேலும் மூன்று முறை சந்திரயானின் சுற்று வட்டப்பாதை உயர்த்தப்படவிருக்கிறது.

சதீஷ் தவான் விண்வெளி நிலையத்திலிருந்து இந்தியாவின் மிக கனமான உந்துகணையான மார்க்-3 மூலம் ஜூலை 14ஆம் தேதி சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட்டது.

முதல் மூன்று வழக்கமான கட்டங்களை வெற்றிகரமாக உந்துகணை பூர்த்தி செய்ததால் சந்திரயான்-3 புவியின் சுற்று வட்டப் பாதையில் துல்லியமாக நிலைநிறுத்தப்பட்டது.

மூன்றாவது கட்டத்தில் விண்வெளியின் வெற்றிடத்தில் சந்திரயான் நுழைந்தது.

இந்த நிலையில் பிரான்சின் பாரிஸ் நகரிலிருந்து சந்திரயான்-3 விண்ணில் ஏவப்படும் நிகழ்வை கவனித்த பிரதமர் மோடி, “இந்தியாவின் விண்வெளி சாகசத்தில் புதிய அத்தியாயத்தை சந்திரயான்-3 படைத்துள்ளது,” என்று குறிப்பிட்டார்.

“சந்திரயான்-3 உயரப் பறந்து ஒவ்வொரு இந்தியரின் லட்சியங்களையும், கனவுகளையும் உயர்த்தியுள்ளது. இந்த மகத்தான சாதனை, நமது விஞ்ஞானிகளின் இடையறாத அர்ப்பணிப்புக்கு சான்றாகும். அவர்களது உணர்வுக்கும் மதிநுட்பத்துக்கும் நான் தலைவணங்குகிறேன்,” என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

ஆகஸ்ட் 3ஆம் தேதி சந்திரயான்-3 விண்கலம் நிலவின் சுற்றுப் பாதையை எட்டவிருக்கிறது.

அதன் பிறகு ஆகஸ்ட் 23ஆம் தேதி சந்திரயான் நிலவில் தரையிறங்க முயற்சி செய்யும்.

இதுவரை எந்த நாடும் முயற்சி செய்யாத நிலவின் தென்துருவத்தில் சந்திரயானை இறக்கும் சவாலான பணியில் இந்திய விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் பயணம் வெற்றிகரமாக அமைந்தால் அமெரிக்கா, முன்னைய சோவியத் யூனியன், சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்ததாக இதனைச் சாதித்த நான்காவது நாடாக இந்தியா இருக்கும்.

குறிப்புச் சொற்கள்