புதுடெல்லி: தென்கிழக்காசிய நாடுகளுக்குச் செல்லும் இந்திய சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
சீனா அதன் எல்லைகளை இன்னும் முழுமையாகத் திறக்காததால் சீன சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.
எனவே, தென்கிழக்காசிய நாடுகளின் சுற்றுப்பயணத்துறையின் வளர்ச்சிக்கு இந்திய சுற்றுப்பயணிகளின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகிவிட்டது.
இந்தியாவின் நடுத்தர வர்த்தகத்தினரின் பொருளாதார நிலை மேம்பட்டு வரும் நிலையில் அவர்களில் பலர் விடுமுறைக் காலங்களின்போது வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைக் கருத்தில்கொண்டு இண்டிகோ, தாய் ஏர்வேஸ் போன்ற விமானச் சேவை நிறுவனங்களிலிருந்து பிரபல ஹோட்டல் நிறுவனங்கள் வரை இந்திய சுற்றுப்பயணிகளைக் கவரும் வகையில் சிறப்புத் தள்ளுபடிகளைத் தருகின்றன.
பல தென்கிழக்காசிய நாடுகளின் பொருளியலுக்கு சுற்றுப்பயணத்துறை மிகவும் முக்கியமானது. கொவிட்-19 நெருக்கடிநிலைக்கு முன்னதாக தென்கிழக்காசிய நாடுகளின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்திக்குப் பயணத்துறை ஏறத்தாழ 12 விழுக்காடு பங்களித்தது.
தென்கிழக்காசிய நாடுகளில் 40 மில்லியனுக்கும் மேற்பட்டோர் சுற்றுப்பயணத்துறையில் பணிபுரிவதாக பொருளியல் ஒத்துழைப்பு, மேம்பாட்டுக்கான அமைப்பு தெரிவித்தது.
தென்கிழக்காசிய நாடுகளின் சுற்றுப்பயணத்துறைக்குக் கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்குச் சீன சுற்றுப்பயணிகள் அதிகம் பங்காற்றினர்.
தொடர்புடைய செய்திகள்
ஆனால் தற்போது அவர்களது வருகை பெருமளவில் குறைந்துவிட்டது.
2019ஆம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மே மாதத்தில் தென்கிழக்காசிய நாடுகளுக்குச் சென்ற சீன சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது 60 விழுக்காடு குறைவு என்று நான்கு தென்கிழக்காசிய நாடுகள் வெளியிட்ட அதிகாரபூர்வத் தரவுகள் காட்டுகின்றன.
அடுத்த பத்து ஆண்டுகளுக்கு சுற்றுப்பயணத்துறையைப் பொறுத்தவரை சீனாவுக்குப் பதிலாக இந்தியா பெரும் பங்களிக்கும் என்று நம்பப்படுகிறது.
ஆனால் இந்தியாவில் குறைவான அளவில் விமான நிலையங்கள் இருப்பதால் சுற்றுப்பயணிகளுக்குத் தேவையான இணைப்பு போதுமான அளவில் இருக்காமல் போகக்கூடும் என்று ஆசிய மேம்பாட்டு வங்கி அதன் மே மாத அறிக்கையில் குறிப்பிட்டது.
தாய்லாந்தின் பொருளியலுக்கு அதன் சுற்றுப்பயணத்துறை மிகவும் முக்கியமானது. அங்கு செல்லும் சீன சுற்றுப்பயணிகளைவிட இந்திய சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அந்த வித்தியாசம் ஏறத்தாழ 14 விழுக்காடு மட்டுமே.
2019ஆம் ஆண்டில் சீன சுற்றுப்பயணிகள் தாய்லாந்தில் நாளுக்கு ஏறத்தாழ 197 அமெரிக்க டாலர் (S$260) செலவழித்தனர். இந்தியர்கள் 180 அமெரிக்க டாலர் செலவு செய்ததாக தாய்லாந்து அரசாங்கம் வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இவ்வாண்டு 1.6 மில்லியன் இந்திய சுற்றுப்பயணிகள் தாய்லாந்துக்குப் பயணம் மேற்கொள்வர் என்று தாய்லாந்தின் சுற்றுப்பயணத்துறை ஆணையம் எதிர்பார்க்கிறது.
கடந்த மே மாதத்தில் சிங்கப்பூருக்கு வந்த சீன சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையைவிட இந்திய சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
அதே மாதத்தில் 64,000க்கும் சற்று அதிகமான சீன சுற்றுப்பயணிகள் இந்தோனீசியாவுக்குப் பயணம் மேற்கொண்டனர். அதே மாதத்தில் ஏறத்தாழ 63,000 இந்திய சுற்றுப்பயணிகள் இந்தோனீசியாவுக்குப் பயணம் மேற்கொண்டனர்.