புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலத்தின் கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த சச்சின் மீனா(23) என்ற ஆடவரும் பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா ஹைதர் (30) என்ற பெண்ணும் பப்ஜி மொபைல் கேம் விளையாடியபோது காதல் வயப்பட்டனர்.
பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா, தனது நான்கு குழந்தைகளுடன் பாகிஸ்தான் எல்லையைத் தாண்டி இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தார்.
அவரை ஏற்றுக்கொண்ட காதலன் சச்சினுடன் வாழ்ந்துவருகிறார். சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த சீமாவுக்கு ஜூலை 7ஆம் தேதி உ.பி. நீதிமன்றம் பிணை வழங்கியது.
நாட்டின் பாதுகாப்பைக் காரணம் காட்டி, பாகிஸ்தானுக்கு உளவு பார்க்கவே சீமா இங்கு வந்துள்ளதாக சிலர் குறைகூறி வருகின்றனர். இருப்பினும் அந்தக் காதல் தம்பதியினருக்கு சிலர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சீமாவின் கைப்பேசியை ஆய்வுசெய்த காவல்துறையினர், அந்தக் கைப்பேசியில் தரவுகள் பல அழிக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.
அவர் பாகிஸ்தானுக்கு உளவு பார்க்க வந்தவரா என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அந்நாட்டின் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ ஆகியவற்றுடன் அவருக்குத் தொடர்பு இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என உத்தரப்பிரதேச பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு கருதுவதாகக் கூறப்படுகிறது.
அதனையடுத்து, சீமா காவல்துறை கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார். உத்தரப்பிரதேச பயங்கரவாத எதிர்ப்புப்படை விசாரணையில் சீமா இந்தியா வந்ததும் அவர் தொடர்புகொண்ட முதல் நபர் சச்சின் அல்ல என்றும் அதற்கு முன்பே சீமா இந்தியாவில் சிலரைத் தொடர்பு கொண்டார், அவர்களில் பெரும்பாலோர் டெல்லி - என்சிஆரைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்து உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
மேலும் சீமா ஹைதரிடம் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் அவரிடம் ஆங்கிலத்தில் சில வரிகளை வாசிக்க வைத்தார்கள், அதை சீமா ஹைதர் நன்றாக வாசித்து உள்ளார். அது மட்டுமல்லாமல் அவருக்கு ஆங்கிலத்தில் நல்ல உச்சரிப்பும் இருந்தது.
சீமா ஹைதர் எல்லை தாண்டி இந்தியா செல்வதற்குக் காரணம் காதல் மட்டுமே என பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ தெரிவித்துள்ளது.