எதிர்த்தரப்பு கூட்டு செய்தியாளர் சந்திப்பைப் புறக்கணித்த லாலு பிரசாத் யாதவ், நிதிஷ் குமார்

எதிர்த்தரப்பு கூட்டு செய்தியாளர் சந்திப்பைப் புறக்கணித்த லாலு பிரசாத் யாதவ், நிதிஷ் குமார்

2 mins read
02acc3c5-dc7c-49f2-bfd8-2037a399139e
பீகார் மாநில முதல்வர் நிதீஷ் குமாரும் (இடது) ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவும் (வலமிருந்து இரண்டாவது) 26 எதிர்க்கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்த கூட்டு செய்தியாளர் சந்திப்பைப் புறக்கணித்தனர். - படம்: இந்திய ஊடகம்

பாட்னா: பீகார் முதல்வர் நிதீஷ் குமார், துணை முதல்வர் தேஜஷ்வி யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் பெங்களூரில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டத்திற்குப் பிறகு ஊடகங்களைச் சந்திப்பதைத் தவிர்த்தனர்.

சந்திப்பு முடிந்து திரும்பியபின் விமான நிலையத்திலிருந்து முதல்வரின் காரில் மூவரும் பயணம் செய்தனர். திரு லாலுவையும் அவரது மகன் திரு தேஜஷ்வியையும் அவர்களின் இல்லத்தில் இறக்கிவிட்ட முதல்வர் பிறகு தமது இல்லம் திரும்பினார்.

பெங்களூரில் 26 எதிர்க்கட்சிகளும் கூட்டாகப் பங்கெடுத்த செய்தியாளர் சந்திப்பையும் மூவரும் புறக்கணித்தனர்.

விமானத்தைத் தவறவிட முடியாது என்பதால் சில தலைவர்கள் கூட்டு செய்தியாளர் சந்திப்பிற்கு முன்பாகவே செல்ல நேரிட்டதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

இருப்பினும் திரு நிதீஷ், திரு லாலு, திரு தேஜஷ்வி உள்ளிட்ட ஜனதா தளத் தலைவர்கள் தனிப்பட்ட விமானத்தில் பயணம் செய்ததையும் அவர்கள் நினைத்திருந்தால் விமானப் புறப்பாட்டு நேரத்தை மாற்றி அமைத்துக் கொண்டிருக்கலாம் என்பதையும் அரசியல் கவனிப்பாளர்கள் சுட்டினர்.

இதற்கு முன்னர் ஜூன் 23ஆம் தேதி பாட்னாவில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகான செய்தியாளர் சந்திப்பில் ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொள்ளவில்லை.

“எதிர்த்தரப்புக் கூட்டணியின் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் நிதீஷ் வருத்தம் அடைந்திருக்கிறார். தமக்கு குழுத்தலைவர் பொறுப்பைத் தராததால் அவர் கூட்டு செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை,” என்று நாடாளுமன்றத்தின் ராஜ்ய சபை உறுப்பினர் சுஷில் குமார் மோடி கூறினார்.

பெங்களூரில் நடைபெற்ற இரண்டாவது கூட்டத்திற்குமுன், அத்தகைய கூட்டம் முக்கியம் என்று வலியுறுத்திய திரு லாலு, நாட்டையும், உழவர்கள், தொழிலாளிகள், இளையர்கள், சிறுபான்மையினர் ஆகிய தரப்பினரையும் காப்பாற்ற அது அவசியம் என்றார்.

பிரதமர் நரேந்திர மோடி தமது ஆட்சிக்காலத்தில் அனைத்தையும் அழிவுக்குள்ளாக்கி இருப்பதாக அவர் சாடினார்.

நாட்டில் ஜனநாயகம், சகோதரத்துவம், அரசியலமைப்பு ஆகியவை ஆபத்துக்கு உள்ளாகியிருப்பதால் எதிர்க்கட்சிகள் அணிதிரண்டிருப்பதாக திரு தேஜஸ்வி பிரசாத் யாதவ் குறிப்பிட்டார்.

முதல்வர் நிதீஷ் குமாருக்கு புதிய கூட்டணிக்கு ‘இந்தியா’ எனப் பெயர் சூட்டியதில் விருப்பம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மற்ற கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டதால் அவரும் அதற்கு ஒப்புதல் அளித்ததாகக் கூறப்பட்டது.

‘இந்திய தேசிய வளர்ச்சிக்கான அனைவரையும் உள்ளடக்கிய கூட்டணி’ எனப் பொருள்படும் ஆங்கில சொற்றொடரின் சுருக்கமாகப் புதிய கூட்டணிக்கு ‘இந்தியா’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்