புதுடெல்லி: பொருளியல் மந்த நிலையில் பிடியில் இருந்து இலங்கை மெல்ல மெல்ல விடுபட்டு தலை எடுத்து வரும் நிலையில், அந்த நாட்டின் அதிபர் ரணில் விக்ரமசிங்கே இந்தியா வருகிறார்.
இந்தியப் பிரதமர் மோடியும் இலங்கை அதிபர் ரணிலும் வெள்ளிக்கிழமை புதுடெல்லியில் பேச்சு நடத்துகிறார்கள். இந்தியா, கடந்த ஓராண்டில் மட்டும் இலங்கைக்கு ஏறத்தாழ US$4 பில்லியன் வழங்கியது. இந்த நிலையில், இருநாடுகளின் தலைவர்களுக்கும் இடையில் நடக்கும் சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இலங்கை அதிபர் ரணில் இருநாள் அதிகாரபூர்வப் பயணமாக வியாழக்கிழமை (ஜூலை 20) இந்தியா செல்கிறார்.
இரு தலைவர்கள் சந்திப்பின்போது இருநாட்டு உறவு மேம்பாடு, வர்த்தகம் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இலங்கையில் கடந்த ஆண்டு வரலாறு காணாத பொருளியல் நெருக்கடி ஏற்பட்டது. அதிபராக இருந்த கோத்தபாய ராஜபக்சே பொதுமக்களின் போராட்டத்தால் பதவி விலகி நாட்டைவிட்டுத் தப்பிச்சென்றார். தொடர்ந்து, இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றுக்கொண்டார்.
அதிபராகப் பதவியேற்றபின் ரணில் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா-இலங்கை நாடுகள் தூதரக உறவுகளைத் தொடங்கி 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இந்தப் பயணம் அமைகிறது. அதிபர் ரணில் இந்திய அதிபர் திரவுபதி முர்முவையும் சந்திக்கிறார்.
மோடி- ரணில் சந்திப்பு, இருநாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பை வலுப்படுத்தும், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் என நம்பப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இலங்கைத் தலைநகர் கொழும்பில் அண்மையில் நடந்த இந்திய நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் கூட்டத்தில் பேசிய அதிபர் ரணில், இந்தியா வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது என்று தெரிவித்தார்.
இந்தியப் பெருங்கடலில் உள்ள நாடுகளையும் சேர்த்து வளர்ச்சிப் பாதையில் இந்தியா அழைத்துச் செல்கிறது என்று கூறிய அதிபர், அமெரிக்க டாலரைப்போல இந்திய ரூபாயையும் பொது நாணயமாகப் பயன்படுத்த இலங்கை தயார் என்றும் குறிப்பிட்டார்.

