ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் பாலி மாவட்டத்தில் உள்ள தகூர்வாஸ் கிராமத்தைச் சேர்ந்த ஜோகிந்தரா, 33, என்பவரின் மனைவிக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த மதன்லால் என்பவருக்கும் தகாத உறவு இருந்தது.
திடீரென்று கடந்த 11ஆம் தேதி முதல் ஜோகிந்தரா மாயமாகிவிட்டார்.
ஜோகிந்தராவின் தந்தை இது குறித்து காவல்துறையில் புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், சந்தேகத்தின் அடிப்படையில் மதன்லாலைக் கைது செய்து விசாரித்தனர்.
ஜோகிந்தராவை கொலை செய்து உடலை துண்டுதுண்டாக வெட்டி புதைத்தாக மதன்லால் ஒப்புக்கொண்டார்.
ஜோகிந்தரா மாயமான அன்று அவரை அழைத்துக்கொண்டு கிராமத்திற்கு அருகே உள்ள வனப்பகுதிக்குச் சென்ற மதன்லால் ஜோகிந்தராவுக்கு மதுவை ஊற்றிக்கொடுத்துவிட்டு தானும் சேர்ந்து மது குடித்தார்.
போதை ஏறியதும், அவர் தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த ஜோகிந்தராவைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி அதே இடத்தில் கொன்றார்.
பின்னர், வீட்டிற்குத் திரும்பிய மதன்லால் நள்ளிரவு மீண்டும் வனப்பகுதிக்குச் சென்று அங்கு உயிரிழந்த நிலையில் கிடந்த ஜோகிந்தராவின் உடலை ஆறு துண்டுகளாக வெட்டினார்.
அவற்றைக் கிராமத்தில் உள்ள மத வழிபாட்டு தலத்தில் புதைத்தார். புதைத்த இடத்தில் மாங்கன்றுகளை நட்டு வைத்தார்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த சில நாள்களாகக் காலை வேளையில் அந்த மாங்கன்றுகளுக்குத் தண்ணீர் ஊற்றினார்.
மதன்லால் இந்த விவரங்களைக் கூறக்கேட்ட அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று புதைக்கப்பட்ட ஜோகிந்தராவின் உடல்பாகங்களைத் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மதன்லாலைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


