சூரத்: அமெரிக்காவின் தற்காப்பு அமைச்சான பென்டகன், உலகின் மிகப் பெரிய அலுவலகமாகத் திகழ்ந்து வருகிறது. ஆனால் பென்டகனைவிடப் பெரிய அலுவலகக் கட்டடம் இந்தியாவில் விரைவில் திறக்கப்பட உள்ளது.
குஜராத்தின் சூரத் மாவட்டத்தில் வைர வணிக மையம் கட்டப்பட்டுள்ளது. 35 ஏக்கரில் ஒன்பது செவ்வக வடிவ அமைப்புகளாக இது கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் 15 மாடிகளைக் கொண்டுள்ளது.
வைரத் தொழிலின் தலைநகரமாக சூரத் விளங்குகிறது. வைரத்தை வெட்டுதல், பட்டை தீட்டுதல், விற்பனை செய்தல் உள்ளிட்ட அனைத்துச் செயல்பாடுகளையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கும் வகையில் இந்தப் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
மொத்தம் 4,200 அலுவலகங்கள் கட்டடத்தில் செயல்பட முடியும். வைரம் தொடர்பான தொழிலில் ஈடுபடும் 65,000 பேர் பணியாற்ற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு ஆண்டு காலமாக கட்டி முடிக்கப்பட்ட இந்த கட்டடத்தை வரும் நவம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார்.
லாப நோக்கற்ற அமைப்பான சூரத் வைர பரிவர்த்தனை நிறுவனம் (எஸ்டிபி) உருவாக்கி உள்ள இந்தக் கட்டடத்தை இந்திய கட்டடக்கலை நிறுவனம் மார்போஜெனிஸ் வடிவமைத்துள்ளது.

