இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி சமூகத்தின் குண்டர் கும்பலைச் சேர்ந்த சிலர், அங்குள்ள குகி பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்கள் இரண்டு பேரை நிர்வாணப்படுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்துச்சென்ற கொடூரமான காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தது.
அந்தச் சம்பவம் நாட்டில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறு இழுத்துச் செல்லப்பட்ட பெண்களில் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறுகையில் ‘‘வெட்கக்கேடான இந்தச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை ஒருபோதும் தப்பிக்க விடமாட்டோம் என்று மக்களுக்கு உறுதி அளிக்கிறேன். சட்டம் முழு வீச்சுடன் அதன் கடமையைச் செய்யும். மணிப்பூர் மகள்களுக்கு நடந்த கொடூரச் செயலை ஒருபோதும் மன்னிக்க முடியாது,” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “என் இதயம் கோபம் மற்றும் வலியால் நிறைந்திருக்கிறது. மணிப்பூர் சம்பவம் எந்தவொரு நாகரிக சமுதாயத்திற்கும் வெட்கக்கேடானது.
“மாநிலச் சட்டம், ஒழுங்கு, குறிப்பாக பெண்கள் பாதுகாப்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி மாநில முதல்வர்களுக்கு வலியுறுத்துகிறேன்,” என்றார்.
நாடாளுமன்றக் கூட்டுத்தொடர் தொடங்கும் முன்பாக பேசிய பிரதமர் மோடி, “மணிப்பூரில் நடந்துள்ள சம்பவம் மனித நாகரிக சமூகத்துக்குக் கிடைத்துள்ள அவமானம். இதற்காக நாடே வெட்கப்படுகிறது.
“பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குக் கடுமையான சட்டங்களை இயற்றும்படி நான் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்,” என்று பிரதமர் மோடி கூறினார்.
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசுகையில், “இந்தச் சம்பவம் ஒரு வெறிச்செயல், மனிதாபிமானமற்றது. இச்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் தப்பிக்க முடியாது. மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் அதற்கான நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளார்,” என்று கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், முதல் அமைச்சர் பிரேன் சிங், அந்தக் காணொளியை சமூக ஊடகங்களில் இருந்து அகற்றும்படி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அந்தச் சம்பவம் மே மாதம் 4ஆம் தேதி மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தின் பைனோம் என்ற சிற்றூரில் நிகழ்ந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அங்குள்ள காங்போக்பி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரணையில் அந்தக் கொடூரச் சம்பவம் குறித்த மேல் விவரங்கள் வெளியாகியுள்ளன.
வன்முறை நடந்த நாளில், குகி பழங்குடியினத்தினர் வாழும் பைனோம் என்னும் சிற்றூரில், மைத்தேயி சமூகத்தினர் நுழைந்து அங்குள்ளவர்களைத் தாக்கி, அவர்களின் வீடுகளைச் சூறையாடினர். அப்போது அவர்களின் தாக்குதலுக்கு அஞ்சி, மக்கள் ஓட்டம் பிடித்தனர்.
அதில் மூன்று பெண்கள் மட்டும் வன்முறையாளர்களிடம் சிக்கிக்கொண்டனர். சிக்கிய அந்த மூன்று பெண்களின் ஆடைகளையும் கலைந்து ஊர்வலமாக அழைத்துச்சென்றனர் மைத்தேயி சமூகக் குண்டர்கள்.
இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “மணிப்பூரில் மனிதம் மாண்டுவிட்டது.
“பிரதமர் நரேந்திர மோடியின் அரசும் பாஜகவும் ஜனநாயகம், சட்டம் ஆகியவற்றை வன்முறை வெறி ஆட்டமாக மாற்றி உள்ளனர். இப்போதும் அடுத்தவர்கள் மீது குற்றம் சுமத்தாமல் என்ன நடந்தது என்பதை நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி எடுத்துரைக்க வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பவும் முடிவு செய்துள்ளனர். பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

