அரசு மரியாதையின்றி கேரள முன்னாள் முதல் அமைச்சர் உம்மன்சாண்டியின் உடல் வியாழன்று அடக்கம்

அரசு மரியாதையின்றி கேரள முன்னாள் முதல் அமைச்சர் உம்மன்சாண்டியின் உடல் வியாழன்று அடக்கம்

2 mins read
bbca03fa-19c9-4abc-9df1-2358103f2c32
வியாழன் பிற்பகல் 3.30 மணிக்கு புதுப்பள்ளி புனித ஜார்ஜ் ஆர்த்தோடக்ஸ் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனைக்கு பின் உம்மன்சாண்டி உடல் அடக்கம் செய்யப்பட்டது. - படம்: இந்திய ஊடகம்

திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் செவ்வாய்க்கிழமையன்று மரணம் அடைந்தார்.

அதைத்தொடர்ந்து அவரது உடல் பெங்களூருவில் உள்ள அவருடைய நண்பரும், முன்னாள் மந்திரியுமான டி.ஜான் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்பட முக்கிய தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் கொண்டு வரப்பட்ட உம்மன்சாண்டி உடல், அவரது பூஜப்புரை புதுப்பள்ளி இல்லத்தில் வைக்கப்பட்டது. பின்னர் திருவனந்தபுரம் தலைமை செயலக தர்பார் அரங்கில் உம்மன்சாண்டியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு கேரள முதல் அமைச்சர் பினராயி விஜயன், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். அங்கிருந்து இரவு 8 மணிக்கு புனித ஜார்ஜ் ஆர்த்தோடக்ஸ் ஆலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

பின்னர் அங்கிருந்து கேரள காங்கிரஸ் மாநில தலைமையகமான இந்திரா பவனுக்கு கொண்டு வரப்பட்டது. ஏராளமானவர்கள் உம்மன்சாண்டி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அதைத்தொடர்ந்து இரவு உம்மன் சாண்டியின் உடல் திருவனந்தபுரத்திலுள்ள புதுப்பள்ளி இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. வியாழன் பிற்பகல் 3.30 மணிக்கு புதுப்பள்ளி புனித ஜார்ஜ் ஆர்த்தோடக்ஸ் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனைக்கு பின் உம்மன்சாண்டி உடல் அடக்கம் செய்யப்பட்டது. முன்னாள் முதல் அமைச்சர் உம்மன்சாண்டியின் உடல் அடக்கம் அரசு மரியாதையின்றி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதாவது உம்மன்சாண்டி சிகிச்சையில் இருந்தபோது நான் மரணம் அடைந்த பின் அரசு மரியாதையின்றி எனது உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று அவரது மனைவி, மகன் மற்றும் மகள்களிடம் தனது விருப்பத்தை தெரிவித்து இருந்தார்.

அதன்படி அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் அரசு மரியாதை இன்றி உடல் அடக்கம் நடைபெறும் என்று அவரது மகன் சாண்டி உம்மன் அறிவித்தார். இது தொடர்பாக அவர் அரசுக்கு வேண்டுகோள் கடிதம் அனுப்பி இருப்பதாகவும் கூறினார். உம்மன் சாண்டியின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவர்களது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தலைமைச் செயலாளர் டாக்டர் வேணு அறிவித்தார்.