ஏழைகளுக்கு குறைந்த கட்டணத்தில் சிறப்பு ரயில்

ஏழைகளுக்கு குறைந்த கட்டணத்தில் சிறப்பு ரயில்

1 mins read
70a5396e-f90a-402c-84dd-deb63ce7eb09
குறைந்த கட்டணத்துடன் சிறப்பு ரயில்கள் ஓரிரு ஆண்டுகளில் சேவை வழங்கத் தொடங்கும். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவின் பீகார், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், அசாம், அரியானா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த வறுமைக் கோட்டுக்குக்கீழ் உள்ள ஏழை, நடுத்தர மக்களுக்கு உதவும் பொருட்டு சிறப்பு ரயில்கள் அறிமுகம் காணவிருக்கின்றன.

பிழைப்பு தேடி பெருநகரங்களுக்குச் செல்லும் வழக்கமுடைய இத்தகையோர் பெரும்பாலும் ரயிலில் பயணம் செய்வதையே விரும்புகின்றனர். எனவே இவர்களின் வசதிக்காக குறைந்த கட்டணத்தில் சிறப்பு ரயில்களை அறிமுகப்படுத்த இந்திய ரயில்வே திட்டமிட்டு உள்ளது.

தற்போது உள்ள ரயில் கட்டணம் ஏழை, நடுத்தர மக்களுக்குக் கட்டுப்படியாகவில்லை எனக் கருதப்படுவதால் ரயில் நிர்வாகம் இதுபற்றி ஆய்வு செய்தது.

இதையடுத்து, படுக்கை வசதிகளுடன் கூடிய பொதுப் பெட்டிகளுடன் புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. பல்வேறு பெரு நகரங்களுக்கு இடையே அவை சேவை வழங்கும்.

நவீன எல்.எச்.பி. பெட்டிகளுடன் இந்த ரயில்கள் உருவாக்கப்படுகின்றன. ஜெர்மன் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்படும் எல்.எச்.பி. பெட்டிகள், விபத்துக்குள்ளானால் உயிரிழப்பு வாய்ப்புகளை முழுமையாகக் குறைக்கின்றன.

இந்த சிறப்பு ரயில்கள் ஓரிரு ஆண்டுகளில் அறிமுகப் படுத்தப்படும். இவற்றில் குறைந்தது 25 சிறப்பு பொதுப் படுக்கை வசதி பெட்டிகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்