திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக இருக்கிறது. அன்றாடம் ஏராளமானோர் தெருநாய்களின் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.
மாநிலம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் 25,000 பேர் வரை தெருநாய்க் கடிக்காக சிகிச்சை பெறுவதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆறு மாதங்களில் 1,67,437 பேர் தெருநாய்க் கடியால் பாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், திருவனந்தபுரத்தில் குழந்தைகளைக் கடித்த தெருநாய்க்கு ரேபிஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் ரேபிஸ் தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதனால் அந்த நாயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் அச்சமடைந்துள்ளனர்.
கேரள மாநிலத்தில் தெருநாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கடந்த சில நாள்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.