புதுடெல்லி: டெல்லியின் வடபகுதியில் அமைந்துள்ள ரோஹினி வட்டார உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சி செய்துகொண்டிருந்த சாக்ஷம் புருதி எனும் 24 வயது இளையர் மின்சாரம் தாக்கி மாண்டார்.
‘டிரெட்மில்’ எனப்படும் நடை/ஓட்டப் பயிற்சிக் கருவியில் ஓடிக்கொண்டிருந்தபோது அவர் மின்சாரத் தாக்குதலுக்கு ஆளானார். பி.டெக் பட்டம் பெற்ற அவர் குருகிராம் பகுதியில் தளம் கொண்டிருக்கும் நிறுவனத்தில் பணிபுரிவதாகக் கூறப்பட்டது.
வழக்கமாகச் செல்லும் ஜிம்பிளெக்ஸ் ஃபிட்னஸ் ஸோன் எனும் உடற்பயிற்சிக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணியளவில் அவர் பயிற்சி செய்துகொண்டிருந்தார். நடைப்பயிற்சிக் கருவியில் பயிற்சி செய்துகொண்டிருந்தபோதே அவர் நிலைகுலைந்து விழுந்தார்.
உடற்கூறாய்வில் அவர் மின்சாரம் தாக்கி மாண்டது உறுதியானது.
உடற்பயிற்சிக் கூட மேலாளரைக் காவல்துறை கைது செய்துள்ளது. நோக்கமில்லா மரணம் விளைவித்ததாக அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உடற்பயிற்சிக் கூடக் கருவி தொடர்பில் அலட்சியமாக இருந்ததாகவும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் குறித்த விசாரணை தொடர்வதாகக் காவல்துறை கூறியது.