மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ராய்காட் மாவட்டத்தில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 119 பேரைக் காணவில்லை என்றும் அவர்கள் நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
இதையடுத்து மீட்புப் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுமாறு அதிகாரி களுக்கு அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டுள்ளார்.
காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்களை அறிய அவசரகட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது.
மோசமான வானிலையால் மீட்புப் பணிகளில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நிலச்சரிவில் சிக்கி காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்க நவி மும்பையில் உள்ள மருத்துவமனையில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மீட்புக் குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீட்புப் பணியில் ஈடுபட்டு இருந்த தீயணைப்புப் படை அதிகாரி ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இதனிடையே, மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்ட தாலுகாக்களில் மலைப்பாங்கான பகுதிகளில் கனமழை தொடர்ந்ததையடுத்து பள்ளிகளுக்கு வியாழக்கிழமை முதல் இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மொத்தம் 355 பள்ளிகள் திறக்கப்படவில்லை.