புதுடெல்லி: இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மெய்தி இன மக்களுக்கும் பழங்குடி இன மக்களுக்கும் இடையே மோதல் இரண்டு மாதங்களுக்கு மேல் நீடித்து வருகிறது.
இதுவரை 150 பேருக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி விட்டனர்.
இந்த நிலையில், இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி ஒரு தரப்பினர் இழுத்துச் சென்ற சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பிரச்சினை, நாடாளுமன்றத்திலும் பெரும் பிரச்சினையைக் கிளப்பியதால் வெள்ளிக்கிழமை மன்றம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மணிப்பூரில் கடந்த மே மாதம் வன்செயல் தொடங்கியது முதல் குறைந்தபட்சம் 6,000 வழக்குகள் பதியப்பட்டு உள்ளன. அவற்றில் 70 வழக்குகள் கொலை வழக்குகள் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. இதுவரை குறைந்தபட்சம் 657 பேர்தான் கைதாகி உள்ளனர்.
வழக்குகள் அதிகமாக பதியப்பட்டு இருந்தாலும் அவற்றை விசாரிக்க 2,000 கீழ்நிலை அதிகாரிகள் மட்டுமே நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் அதிக அதிகாரிகள் ஈடுபட்டு இருப்பதால் பல வழக்குகளைப் பொறுத்தவரை இன்னமும் விசாரணையே தொடங்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 75 வழக்குகள் பதியப்படுகின்றன. ஆனால் அவற்றை விசாரிக்க போதிய அதிகாரிகள் இல்லை.
தொடர்புடைய செய்திகள்
“ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளை வேறு ஒரு பிரிவினர் வசிக்கும் இடங்களில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பணிக்கு அனுப்புகிறார்கள்.
“இதனால் அந்த அதிகாரிகளின் உயிருக்கு மிரட்டல் ஏற்படுகிறது,” என்று உயர்நிலை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக இந்திய ஊடகம் கூறியது.

