மணிப்பூர்: ஓய்வதற்குப் பதிலாக வன்செயல் கூடுகிறது; சந்தேக நபரின் வீடு தீக்கிரை

2 mins read
eb4767fd-f2e0-4173-a2a7-3668fcbe9e65
மணிப்பூர் மாநிலத்தில் வன்செயல்களில் ஈடுபட்டு வரும் இரண்டு சமூகங்களில் ஒரு சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக சாலையில் இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தைக் காட்டும் காணொளி வெளியானதை அடுத்து கோபமடைந்த கிராம மக்கள், அந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளி என்று கருதப்படும் ஒரு நபரின் வீட்டை தீயிட்டு எரித்துவிட்டனர். - படம்: இந்திய ஊடகம் 
multi-img1 of 2

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் வன்செயல் ஓய்வதற்குப் பதில் கூடுவதாகத் தெரிகிறது.

அந்த மாநிலத்தில் 53 விழுக்காட்டினர் மெய்தி என்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 40 விழுக்காட்டினர் குகி என்ற இனத்தைச் சேர்ந்தவர்கள்.

இவர்களில் குகி இனத்தவர்களுக்கு ஏற்கெனவே பழங்குடியின அந்தஸ்து கிடைத்து இருக்கிறது. தங்களுக்கும் அந்தச் சலுகை வேண்டும் என்று கேட்டு மெய்தி இன மக்கள் போராடி வருகிறார்கள்.

ஆனால், இதை குகி இனத்தவர்கள் எதிர்ப்பதால் இரண்டு தரப்பினருக்கும் இடையில் கடந்த மே மாதம் முதலே வன்செயல் மூண்டு 150க்கும் மேற்பட்டவர்கள் மாண்டனர். ஏராள பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், குகி இன கிராமம் ஒன்றில் புகுந்த மெய்தி இனத்தவர்கள் படுமோசமான வன்செயலில் ஈடுபட்டு இரு குகி இன பெண்களை நிர்வாணமாக இழுத்துச் சென்று அவர்களை பாலியல் பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்திய சம்பவம் அண்மையில் இணையத்தில் காணொளிப் படங்களாக பதிவேற்றப்பட்டு பெரும் பதற்றத்தைக் கிளப்பியது.

அந்தக் கொடுமையைத் தடுத்த இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து அதன் தொடர்பில் காவல்துறையினர் நால்வரைக் கைது செய்தனர். அவர்களில் ஹூய்ரீம் ஹிரதாஷ் சிங், 32, என்பவர் முக்கியமானவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பலரை அவர்கள் தேடி வருகிறார்கள்.

இந்நிலையில், தங்கள் இனத்தவருக்கு ஏற்பட்ட கொடுமையை எதிர்த்து குகி இன மக்கள் மாநிலம் முழுவதும் போராட்டங்களைத் தொடங்கி இருக்கிறார்கள். மணிப்பூர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இதனிடையே, ஹூய்ரீம் ஹிரதாஷ் சிங்கின் வீட்டை மர்ம மனிதர்கள் தீ வைத்து எரித்துவிட்டனர். இந்தச் சம்பவத்தை அடுத்து பீச்சி அவாங் லெகாய் என்ற அந்தப் பகுதியில் அச்சம் நிலவுவதாக நேற்று ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்