புதுடெல்லி: இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டு வியாழக்கிழமை இந்தியா வந்தார். அதிபர் ரணில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துப் பேசினார்.
இலங்கை அதிபர், புதுடெல்லியில் பிரதமர் மோடியை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். இரு தலைவர்களும் பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசித்தனர். பொருளியல், பாதுகாப்பு, இலங்கை தமிழர் விவகாரம், தமிழக மீனவர்கள் விவகாரம், இரு நாட்டு உறவு மேம்பாடு உள்ளிட்ட பலவும் விவாதிக்கப்பட்டன.
இந்தியா-இலங்கை இடையேயான தூதரக உறவு 75வது ஆண்டைக் கொண்டாடும் வேளையில் ரணில் வருகை இடம்பெற்றது என்று இந்திய வெளியுறவு அமைச்சு செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி டுவிட்டரில் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இருநாடுகளிடையே மக்கள் தொடர்பு, விமானச் சேவை, எரிசக்தி, பொருளியல் சீர்திருத்தங்கள் உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
நாகை-இலங்கையிடையே பயணிகள் கப்பல் இயக்கவும் இலங்கையில் தமிழர்களுக்குப் புதிய வீடுகளைக் கட்டித்தரவும் ஏதுவாக புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன.
இந்தியாவின் யுபிஐ தொழில் நுட்பத்தை இலங்கை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.