அதிர்ச்சியூட்டும் அடுத்தடுத்த காணொளிகள்; புரளிகளை நம்பாதீர் என முதல்வர் கோரிக்கை

2 mins read
e354b4b5-8841-4060-bd97-8c58f1eb74a7
மணிப்பூர் சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரின் வீடுகளை ஆவேசத்துடன் இடிக்கும் பழங்குடியின பெண்கள். - படம்: இந்திய ஊடகம் 
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் நடந்து வரும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் சென்னையில் குரல் கொடுத்தனர். கறுப்புத் துணியால் வாயைக் கட்டிக்கொண்டு மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டக் கோரி அவர்கள் முழக்கமிட்டனர்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் நடந்து வரும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் சென்னையில் குரல் கொடுத்தனர். கறுப்புத் துணியால் வாயைக் கட்டிக்கொண்டு மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டக் கோரி அவர்கள் முழக்கமிட்டனர். - படம்: ஏஎஃப்பி

இம்பால்: இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் அதிர்ச்சியூட்டும் காணொளிகள் அடுத்தடுத்து வெளியாகும் சூழலில் புரளி செய்திகளை நம்ப வேண்டாம் என்று அந்த மாநில அரசாங்கம் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து இருக்கிறது.

மணிப்பூரின் தெளபால் மாவட்டத்தில் மூன்று பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்து இரண்டு நாட்களுக்கு பின்னர், மே 6ஆம் தேதி 45 வயது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவரது எரிந்த உடலின் புகைப்படம் இப்போது இணையத்தில் பரவி வருகிறது.

தெளபால் மாநிலத்தில் கடந்த மே 4ஆம் தேதி பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் ஜூலை 19ஆம் தேதி காணொளி மூலம் வெளியாகி பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

தெளபால் சம்பவம் வெளியானதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை மாநிலத்தில் ஆளும் பாஜகவின் ஏழு பேர் உள்ளிட்ட 10 குகி சமூகத்தைச் சேர்ந்த 10 எம்எல்ஏக்கள், மே 3ஆம் தேதியில் இருந்து குகி சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அல்லது கொலை செய்யப்பட்ட நான்கு சம்பவங்களைக் குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், மணிப்பூர் மாநில முதல்வர் பிரன் சிங் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசினார்.

புரளி செய்திகளை நம்ப வேண்டாம் என்று பொதுமக்களைக் கேட்டுக்கொண்ட அவர், கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் அருகாமையில் இருக்கும் காவல் நிலையங்களில் ஒப்படைத்துவிடும்படி மக்களை வலியுறுத்தினார்.

மாநில காவல்துறை அனைத்து குற்றவாளிகளையும் பிடிக்க முழுமூச்சாக முயன்று வருகிறது.

அவர்கள் எங்கு பதுங்கி இருந்தாலும் தப்ப முடியாது. ஆகையால், மாநிலத்தின் அனைத்து இன மக்களும் அமைதி காக்க வேண்டும் என்று முதல்வர் அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், மணிப்பூரில் பாஜக ஆட்சியை களைத்துவிட்டு அதிபர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று எதிர்த்தரப்புகள் குரல்கொடுத்து வருகின்றன.

அந்த மாநிலத்தில் இன்னமும் ஆர்ப்பாட்டங்கள் ஓய்ந்தபாடில்லை.

கையில் தீவட்டிகளுடன் மாதர்கள் பல இடங்களிலும் ஆர்ப்பாட்டத்தில் குதித்து இருப்பதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

குறிப்புச் சொற்கள்