சனிக்கிழமை ஒரு சாமானியர் - சைக்கிள் சக்கரத்தோடு சுழலும் வாழ்க்கை சக்கரம்

 தன் வாழ்க்கைச் சக்கரம் இதுவரை ஒரே திசையில் சுற்றிவந்திருப்பதாகக் கூறுகிறார், திரு பி. விஜயன், என்ற 64 வயது சைக்கிள் பழுதுபார்க்கும் சாமானியர். சைக்கிளின் முன் சக்கரத்தை தொடர்ந்து பின் சக்கரம் செல்வதைப் போல் தன் எஞ்சிய வாழ்வும் சைக்கிளோடு ஓடும் என்கிறார் இந்தப் பாமரர்.

அவ்வளவாக கல்வி அறிவு இல்லை என்றாலும் கைத்தொழில் தெரிந்ததால் சைக்கிள் சக்கரத்துடன் சேர்ந்து தன் வாழ்க்கைச் சக்கரமும் தொய்வில்லாமல் ஓடுவதாகக் கூறுகிறார், சைக்கிள் பழுது பார்ப்புத் தொழிலர் திரு விஜயன்.

சீர்காழி நகருக்குப் புறத்தே நான்கு சாலை சந்திப்பில் சாலை ஓரமாக சைக்கிள்களைப் பழுதுபார்த்துக் கொடுக்கும் இந்தப் பாமரரின் சொந்த ஊர் புஞ்செய்.

பூம்புகார் உள்ளிட்ட சில பேரூர்களில் சைக்கிள் கடை நடத்தி நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கில்கூட சம்பாதித்த இவர், இப்போது சாலைச் சந்திப்பில் வாடிக்கையாளர்களை எதிர்பார்த்து காத்திருந்து உதவி வருகிறார்.

“என் தந்தை திரு வீரப்பன், சுமார் அரை நூற்றாண்டுக்கு முன், நான் 12 வயது சிறுவனாக இருந்தபோது, பூம்புகாரில் வாடகைக்கு இடம் பிடித்து சைக்கிள் கடை வைத்து இருந்தார்.

“கடைக்கான மாத வாடகை 60 ரூபாய். நான் என் தந்தை கடையில் வேலை பார்த்தேன். வாடகைக்கு சைக்கிள் கொடுப்பதும் உண்டு.

“தொழில் மிக நன்றாக நடந்துவந்தது. அப்போது சைக்கிள்கள்தான் அதிகம்.

“நாள் ஒன்றுக்கு 1,500 ரூபாய்கூட வருமானம் கிடைத்தது. தொழில் நல்லபடியாக நடந்து வந்த நிலையில் ஒரு நாள் காலை நேரத்தில் கடையில் நல்ல கூட்டம்.

“என் தந்தை சைக்கிள்களைப் பழுது பார்த்துக்கொண்டு இருந்தார். அன்று காலை நேரத்திலேயே சுமார் 300 ரூபாய் சேர்ந்துவிட்டது.

“பணத்தை வேட்டியில் முடிந்துவைத்துக்கொண்டு சைக்கிள் வேலை செய்துகொண்டு இருந்த என் தந்தை திடீரென்று மயங்கி விழுந்து அதே இடத்தில் மாண்டுவிட்டார்.

“அப்போது அவருக்கு வயது 55 இருக்கும். தந்தை மரணத்தை தொடர்ந்து என் உடன் பிறந்தவர்கள் விவசாயத்தில் ஈடுபடப் போய்விட்டார்கள். நான் கடையைத் தொடர்ந்து நடத்தினேன். காலம் மாறியது. எனக்குத் திருமணம் நடந்தது. சைக்கிள் கடை இடத்திற்கான வாடகை கூடியது.

“மாதம் ரூ.60ஆக இருந்த வாடகை, நாள் ஒன்றுக்கு ரூ.60 அளவுக்குக் கூடியது. சமாளிக்க முடியவில்லை. அதற்குள்ளாக எனது மகன் திரு விமல், 26, ஓரளவு படித்துவிட்டு வேலைக்குச் சென்றான். மகள் செல்வி மஞ்சுவிற்கு, 24, சீர்காழியில் ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்தது.

“மகளின் வசதிக்காக இங்கே வந்து ஒரு வாடகை வீட்டில் நானும் மனைவியும் வசித்து வருகிறோம். இப்போது மகள் சென்னையிலும் மகன் சிதம்பரத்திலும் வேலை பார்க்கிறார்கள்.

“இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. மகனும் மகளும் எனக்கும் மனைவிக்கும் உதவி வருகிறார்கள். வசதியாக இருப்பதால் நாங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக இங்கேயே வசித்து வருகிறோம்.

“இனிமேல் முச்சந்தியில் கடைபோட்டு சைக்கிள் பழுதுபார்ப்பு வேலை எதையும் செய்ய வேண்டாம். பார்த்தது போதும். வீட்டில் ஓய்வாக இருங்கள் என்று என் பிள்ளைகள் கூறுகிறார்கள். ஆனால் நான் மறுத்துவிட்டேன்.

“என் தந்தையைப் போல் நானும் சைக்கிள் வேலை செய்துகொண்டு இருக்கையிலேயே மரணமடைய வேண்டும். என்னை என் போக்கிற்கு விட்டுவிடுங்கள் என்று பிள்ளைகளிடம் திட்டவட்டமாகக் கூறிவிட்டேன்” என்று திரு விஜயன் தெரிவித்தார்.

திரு விஜயன், அந்தக் கால பழைய சைக்கிள் ஒன்றை நல்ல நிலையில் பராமரித்து சொந்தமாகப் பயன்படுத்தி வருகிறார். அருகே இருந்த அந்தச் சைக்கிளைப் பார்த்தேன்.

அதைத் தன் மகளுக்குக் கொடுக்கப்போவதாக அவர் கூறினார்.

“மழை, வெய்யில் என்று பார்ப்பதில்லை. காலையில் வீட்டைவிட்டுக் கிளம்பி 30 நிமிடங்களில் சைக்கிளில் 9 மணிக்கு இங்கு வந்து விடுவேன். மாலை 5 மணி வரை இங்கேயே வாசம்.

“நாள் ஒன்றுக்குச் சராசரியாக ரூ.150 முதல் ரூ.200 வரை கிடைக்கும். மழை வந்தால் தார்ப்பாய் ஒன்றைக் கொண்டு நனையாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

“பஞ்சர் ஒட்ட ரூ.30; கோட்டம் எடுக்க ரூ.75; சைக்கிளை முற்றிலும் கழற்றிப் பழுதுபார்க்க ரூ.400 வாங்குவேன். ஒரு சைக்கிளை முற்றிலும் பழுதுபார்க்க இரண்டு நாள்கள் பிடிக்கும். மெனக்கெட்டால் ஒரே நாளிலும் முடிக்கலாம். பத்திரிவைப்பு வேலையைத் தவிர இதர சைக்கிள் வேலை அனைத் தையும் செய்வேன்,” என்றார் திரு விஜயன்.

நான் அவருடன் பேசிக் கொண்டு இருந்த 45 நிமிட நேரத்தில் இரண்டு பேர் பஞ்சர் ஒட்ட வந்தார்கள். வேறு ஒருவர் சைக்கிள் சக்கரத்தில் கம்பிகளை மாற்றுவதற்காக தன் சைக்கிளுடன் வந்திருந்தார்.

“காலம் மாறிவிட்டது. சைக்கிள் புழக்கம் குறைந்துவிட்டது. மாணவர்களுக்கு இலவச சைக்கிள் கொடுக்கிறார்கள். அதனால் அவர்களில் சிலரை சைக்கிளுடன் பார்க்க முடிகிறது.

“இப்போது வாடகை சைக்கிள் கடை ஏறக்குறைய இல்லை. வாடகைக்குச் சைக்கிள் கொடுத்தால் சைக்கிள் திரும்பாது. காவல்துறையில் புகார் கொடுத்தாலும் சரிபட்டுவராது. வேலைக்கு ஆள் கிடைப்பதும் சிரமம்,” என்று தெரிவித்தார் திரு விஜயன்.

“சைக்கிள் ஓட்டுவது உடலுக்கு மிக நல்லது. நல்ல உடற்பயிற்சி. ஆனால் காலம் வேகமாகிவிட்டதால் அதற்கு ஏற்ப மோட்டார்சைக்கிள்கள் பெருகிவிட்டன.

“சைக்கிள், வசதி குறைவான ஒன்று என்ற நிலை ஏற்பட்டு விட்டது. ஆனால் எது மாறினாலும் என் வாழ்க்கை மாறாது. என் வாழ்க்கை சைக்கிளோடுதான்,” என்று சொல்லி நிறுத்தினார் திரு விஜயன்.

எல்லாருடைய வாழ்க்கையிலும் சக்கரம் ஒரு பக்கமாகவேச் சுற்றாது என்று சொல்வார்கள். ஆனால், என் வாழ்க்கையைப் பொறுத்தவரை அது சைக்கிள் சக்கரத்தோடு சேர்ந்துதான் சுழன்று வருகிறது.

“இறுதிவரை என் வாழ்க்கை சைக்கிளோடும் சக்கரத்தோடும்தான் சுழலும்,” என்று கூறிய திரு விஜயனிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டு நான் எனது இரு சக்கரமோட்டார் வாகனத்தில் புறப்பட்டேன்.

சைக்கிள் ஓட்டுவதுதான் சாலச்சிறந்தது என்ற எண்ணம் மற்றவர்களைப் போலவே என் மனதிலும் ஏற்பட்டது.

ஆனால், வேகமாக ஓடும் காலத்தோடு சேர்ந்து ஓட சைக்கிள் என்னைப் போன்ற பலருக்கு ஒத்துவரவில்லை என்பதை நினைக்கும்போது ஏக்கமும் வருத்தமும்தான் மிஞ்சுகிறது.

என் தந்தை அவரின் 55வது வயதில், பூம்புகாரில் எங்கள் கடையில் சைக்கிள் பழுதுபார்த்துக்கொண்டு இருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்து இறந்துவிட்டார். அதேபோல் நானும் சைக்கிள் வேலை செய்துகொண்டு இருக்கும்போதே இறந்துவிட வேண்டும்.  

திரு விஜயன், 64. 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!