நீதி கேட்டு சாலையில் படுத்துப் போராடிய காவல்துறை அதிகாரி

நீதி கேட்டு சாலையில் படுத்துப் போராடிய காவல்துறை அதிகாரி

2 mins read
31c78836-1650-4098-8ef6-e2119b3a3d95
திருட்டு வழக்கில் தான் கைது செய்த ஆடவரை சக அதிகாரிகள் விட்டுவிட்டதாகக் கூறி அதிகாரி ஒருவர் நெடுஞ்சாலையில் வாகனங்கள் முன்பு படுத்துப் போராடியதாகக் கூறப்பட்டது. - படம்: இந்திய ஊடகம்

ஜலந்தர்: பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் காவல்துறை அதிகாரி ஒருவர் திடீரென சாலையில் படுத்துக்கொண்டு போராட்டம் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

அச்சம்பவம் தொடர்பான காணொளிகள் இணையத்தில் பரவிவருகின்றன.

காணொளியில், ஊர்க்காவல் படை வீரர் ஒருவர் நெடுஞ்சாலையில் உள்ள பேருந்தின் முன்னால் படுத்துக்கொண்டு போராடுவதும் அவரை சக அதிகாரிகள் எழுந்திருக்கும்படி உதைப்பதுபோலும் தெரிவதாக ஊடகங்கள் கூறுகின்றன.

எழுந்திருக்காமல் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய அதிகாரி, “நான் சிரமப்பட்டுத் திருடர்களைப் பிடிக்கிறேன். ஆனால் எனது சக அதிகாரிகள் பணத்தை வாங்கிக்கொண்டு அந்தத் திருடர்களை விட்டுவிடுகிறார்கள். இதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை,” என்று சொன்னதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் ஜலந்தரின் போக்பூர் பகுதியில் உள்ள பதான்கோட் நெடுஞ்சாலையில் நடந்ததாகத் தெரிகிறது. அந்த அதிகாரி போக்பூர் காவல் நிலையத்தில் பணிபுரிகிறார்.

வழக்கு தொடர்பாக ஒருவரைக் கைது செய்து காவல் நிலையத்திற்குக் கொண்டுசென்று தடுப்புக் காவலில் அடைத்தார் அந்த அதிகாரி. மறுநாள் காவல் நிலையம் சென்று பார்த்தபோது அந்தக் கைதியை காணவில்லை. சக அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் மழுப்பலாகப் பதில் அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அதிகாரி, நெடுஞ்சாலைச் சந்திப்பில் நான்குபுறமும் கயிறு கட்டிப் போக்குவரத்தை நிறுத்தித் தனது எதிர்ப்பை தெரிவித்தார். சக அதிகாரிகள் அந்தக் கயிறுகளை அவிழ்த்துவிட்டதை அடுத்து சாலையில் வாகனங்களின் முன்பு படுத்துப் போராடினார்.

இந்நிலையில், அதிகாரியின் குற்றச்சாட்டை காவல் நிலையப் பொறுப்பாளர் சுக்ஜித் சிங் மறுத்துள்ளார். சம்பந்தப்பட்ட கைதி பிணையில் விடுவிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். மேலும், போராட்டம் நடத்திய அதிகாரியை சக அதிகாரி காலால் உதைக்கவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

குறிப்புச் சொற்கள்