திருப்பதி: பக்தர்கள் 15 மணி நேரம் காத்திருந்து திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கிறார்கள்.
வார இறுதி நாள்களில் அலைமோதும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த இயலாமல் காவல்துறையினரும் தேவஸ்தான கண்காணிப்பு அதிகாரிகளும் திணறி வருகின்றனர்.
சனிக்கிழமை அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் எண்ணிக்கை மேலும் அதிகமானது.
தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு குடிநீர், பால், உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்படுகின்றன. பக்தர்கள் சுமார் 15 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
இதேபோல் லட்டு வழங்கப்படும் இடத்திலும் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.
திருப்பதியில் சனிக்கிழமை 84,430 பேர் தரிசனம் செய்தனர்; 38,662 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ 3.45 கோடி உண்டியல் காணிக்கை வசூலானதாக தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

