புதுடெல்லி: டெல்லி மகளிர் ஆணையத் தலைவி ஸ்வாதி மாலிவால் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் புறப்பட்டுச் சென்றார்.
அவரது வருகைக்கு மணிப்பூர் அரசு அனுமதி அளிக்காத நிலையில் அவர் திட்டமிட்டபடி தமது பயணத்தைத் தொடங்கி உள்ளார். அவரது பயணத்தைத் தள்ளி வைக்குமாறு மணிப்பூர் மாநில அரசு ஸ்வாதியைக் கேட்டுக்கொண்டது.
முன்னதாக, மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்கிற்கு கடிதம் எழுதியிருப்பதாகவும், அவரை ஞாயிற்றுக்கிழமை சந்திக்க அனுமதி கேட்டிருப்பதாகவும் ஸ்வாதி தமது டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களைச் சந்தித்துப் பேசவும் தாம் திட்டமிட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
முதல்வர் பிரேன் சிங்கிற்கு அனுமதி கேட்டு எழுதிய கடிதத்தையும் அவர் வெளியிட்டார்.
அந்தக் கடிதத்தில், “மணிப்பூரில் மனித உரிமை மீறல்கள் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகள் தொடர்பான பிரச்சினையை விவாதிக்க உங்களை அவசரமாகச் சந்திக்க விரும்புகிறேன்.
“மாநிலத்தில் நடந்து வரும் வன்முறையில் இருந்து தப்பிக்க பல மணிப்பூர் பெண்கள் டெல்லிக்கு வந்துள்ளனர். அவர்களின் நலன் தொடர்பான பிரச்சினைகளையும் உங்களுடன் விவாதிக்க விரும்புகிறேன்.
“எனவே, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியுள்ள நிவாரண முகாம்களை பார்வையிட ஆதரவு அளிக்க வேண்டும்,” என்று ஸ்வாதி தெரிவித்து இருந்தார்.

