இந்தியா-இலங்கை தரைவழி பற்றி பரிசீலிக்க இரு தரப்பு இணக்கம்

இந்தியா-இலங்கை தரைவழி பற்றி பரிசீலிக்க இரு தரப்பு இணக்கம்

3 mins read
2c911907-903f-4df2-ba1e-7fc6ff9f4b76
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே (இடது) ஜூலை 21ஆம் தேதி புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். - படம்: இபிஏ

புதுடெல்லி: இந்தியாவுக்கும் இலங்கைக்கும் தரைவழி இணைப்புப் பாதை ஒன்றை உருவாக்குவது பற்றி பரிசீலிக்க வெள்ளிக்கிழமை இரு நாடுகளும் இணங்கின.

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு இந்தியா சென்றிருந்தார்.

அப்போது அவர் இந்திய தலைவர்களைச் சந்தித்தார். பிரதமர் நரேந்திர மோடியுடன் அதிபர் ரணில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்த இணக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன.

பாக் நீரிணை சில இடங்களில் 25 கி.மீ. அகலம் தான் இருக்கிறது. அதன் வழியாக இரு நாடுகளுக்கும் இடையில் தரை வழி ஒன்றை ஏற்படுத்தினால் இலங்கையின் திருகோணமலை, கொழும்பு ஆகிய துறைமுகங்களை இந்தியா உத்திபூர்வ முறையில் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

மில்லியன் ஆண்டுகால உறவுக்குச் சொந்தமான இந்தியா-இலங்கை இரு நாடுகளுக்கும் இடையில் அந்த உறவு மேலும் அணுக்கமடையும் என்று இரு நாடுகளும் அறிக்கை ஒன்றில் தெரிவித்தன.

இரு நாடுகளுக்கும் இடையில் தரைப்பாலம் வழியாக அந்த தரை வழியை அமைக்கலாம் என்ற யோசனை சாத்தியமா என்பது பற்றி ஆராய ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

அதோடு மட்டுமன்றி, பெட்ரோலிய விநியோகக் குழாய்க் கட்டமைப்பு ஒன்றை அமைப்பது பற்றியும் ஆய்வுகள் நடத்தப்படும் என்று இலங்கை அதிபருடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

இலங்கையில் வரலாறு காணாத அளவுக்குப் பொருளியல் நெருக்கடிகள் ஏற்பட்டதை அடுத்து அந்த நாட்டின் அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார்.

அதன் பிறகு அவர் முதன்முதலாக இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் அளித்தார்.

பொருளியல் நெருக்கடியில் சிக்கிக்கொண்ட இலங்கைக்கு, இந்தியா ஏறக்குறைய US$4 பில்லியன் (S$5.3பில்லியன்) உதவி அளித்து இருக்கிறது.

‘‘இலங்கை சென்ற ஆண்டில் பல சவால்களை எதிர்நோக்கியது. அந்த நாடு இந்தியாவுக்கு அணுக்கத் தோழமை நாடு.

‘‘ஆகையால், இலங்கை மக்களின் துயர் களைய தோளோடு தோள் கொடுத்து உறுதுணையாக இலங்கைக்கு இந்தியா உதவியது,’’ என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

இலங்கை அதிபருடன் கூடிய விவாதத்தின்போது இலங்கையில் சீன ஆதிக்கம் பற்றிய கவலை தெரிவிக்கப்பட்டதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் வினய் வத்ரா தெரிவித்தார்.

இலங்கைக்கு மிக அதிக அளவில் சீனா கடன் கொடுத்து இருக்கிறது. பெய்ஜிங்கிடம் இருந்து வாங்கிய பெரும் கடனை அடைக்க முடியாமல் போனதால் இலங்கையின் தென்புறம் உள்ள அம்மாந்தோட்டை என்ற துறைமுகத்தை 99 ஆண்டு குத்தகைக்கு சீன நிறுவனம் ஒன்று பெற்று இருக்கிறது.

கொழும்பு துறைமுகத்திற்கு அருகே US$1.4 பில்லியன் நில மீட்பு திட்டம் ஒன்றும் நடந்து வருகிறது. இலங்கையில் ஆகப் பெரிய வெளிநாட்டு முதலீடாக இதுவே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இலங்கையில் இந்த அளவுக்கு இடம்பெற்று வருகின்ற சீன ஆக்கிரமிப்பைக் கண்டு இந்திய தரப்பில் அச்சம் தலைதூக்கி இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐரோப்பாவிற்கும் கிழக்கு ஆசியாவுக்கும் இடையிலான அனைத்துலக கடல் வழியில் பாதி தொலைவில் இலங்கை தீவு அமைந்து இருக்கிறது.

கொழும்பு, அம்மாந்தோட்டை ஆகிய இரண்டு துறைமுகங்கள் மட்டுமே துபாய்க்கும் சிங்கப்பூருக்கும் இடையில் அமைந்துள்ள இரண்டே இரண்டு ஆழ்கடல் துறைமுகங்கள் ஆகும்.

சீனா தன்னுடைய கடல்-நில பிரம்மாண்ட வழித்தட திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியப் பெருங்கடலைச் சுற்றி இருக்கும் நாடுகளுடன் உள்கட்டமைப்பு வசதி உடன்பாடுகளைச் செய்துகொண்டு இருக்கிறது.

யுவான் வாங் 5 என்ற சீனாவின் ஆய்வுக் கப்பல் சென்ற ஆண்டு அம்மாந்தோட்டை துறைமுகத்திற்குச் சென்றது.

அந்தக் கப்பல் சீனாவின் வேவு கப்பல் என்று குறிப்பிட்டு இந்தியாவில் அதன் தொடர்பில் பாதுகாப்பு கவலைகள் தெரிவிக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்