இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் மே 3ஆம் தேதிக்குப் பின் பல கொடூரச் சம்பவங்கள் நடைபெற்றது பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
தலைநகர் இம்பாலில் கடந்த மே 4ஆம் தேதி அன்று மற்றொரு கொடூரச் சம்பவமும் நடைபெற்றது. அது பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கார் சுத்தம் செய்யும் கடை ஒன்றில் குகி இனத்தைச் சேர்ந்த இரு சகோதரிகள் பணியாற்றியுள்ளனர்.
இவர்களில் ஒருவருக்கு வயது 24, அவரது தங்கைக்கு வயது 21. இருவரும் இம்பால் நகரில் மைத்தேயி மக்கள் அதிகம் வசிக்கும் கோன்வுங் மனாக் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
இவர்களது வீட்டுக்கு கடந்த மே 4ஆம் தேதி அன்று மைத்தேயி இனத்தவர்கள் கும்பலாகப் புகுந்து பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் அவர்களைக் கொன்றனர்.
இச்சம்பவம் குறித்து இவர்களின் தந்தை அளித்துள்ள பேட்டியில், “நாங்கள் குகி பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள். எனது மகள்கள் வசித்த வீட்டுக்கு மைத்தேயி இனத்தைச் சேர்ந்த கும்பல் கடந்த மே 4ஆம் தேதி புகுந்து கொலை செய்ததாக மூத்த மகளின் தோழி ஒருவர் கூறினார்.
இத்தகவலை கேட்டு சவக்கிடங்குக்கு நான் காவல்துறை அதிகாரியுடன் சென்றேன். எனது மகள்கள் இருவரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு , கொல்லப்பட்டதாக மருத்துவர் தெரிவித்தார்.
இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. விசாரணைக்காக உடல்களை சவக்கிடங்கில் வைத்துள்ளதாகத் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இவ்வாறு கொலை செய்யப்பட்ட சகோதரிகளின் தந்தை கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
மணிப்பூர் வன்முறையில் நடந்த பல கொடூரச் சம்பவங்களுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. அதனால் மணிப்பூர் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என குகி இனத்தவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து மாநில, மத்திய அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து இந்தியாவின் பல மாநிலங்களில் அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களில் இறங்கியுள்ளன.

