லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி கியான்வாபி பள்ளிவாசல் உள்ளது.
அந்தப் பள்ளிவாசலின் சுவரில் சிங்கார கௌரி அம்மன் வடிவம் உள்ளது எனவும் அதை வழிபடுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கடந்த 2021ஆம் ஆண்டில் ஐந்து பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தனர். ஆனால், அது பள்ளிவாசலின் நீரூற்றின் ஒரு பகுதி என்று பள்ளிவாசல் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்தப் பள்ளிவாசலில் தொல்லியல் துறை ஆய்வு நடத்துவதற்கு வாரணாசி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதையடுத்து திங்கட்கிழமை காலை அங்கு ஆய்வுப் பணி தொடங்கியது. இந்நிலையில், அங்கு ஆய்வு மேற்கொள்ள வாரணாசி நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், அதன் உத்தரவை ஜூலை 26ஆம் தேதி (புதன்கிழமை) மாலை வரை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை மாலை உத்தரவிட்டது. அதையடுத்து ஆய்வுப் பணி நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக அந்த ஆய்வுக்கு எதிராக கலவரம் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தால் அந்தச் சுற்றுவட்டாரப் பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஆய்வில் தொல்லியல் துறை அதிகாரிகள் உள்ளிட்ட 40 பேர் கலந்துகொண்டனர்.
இதற்கிடையில் தி அஞ்சுமான் இன்டேஸமியா பள்ளிவாசல் குழு இந்த ஆய்வைப் புறக்கணிப்பதாகக் கூறியுள்ளது. அத்துடன் எங்கள் தரப்பு வழக்கறிஞர்கள் உள்ளிட்ட எவரும் இந்த ஆய்வில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று அக்குழுவின் இணைச் செயலாளர் எஸ்எம் யாசின் கூறியுள்ளார்.