சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது. அதனால் நிலச்சரிவு, வெள்ளம் போன்ற பேரிடர்கள் ஏற்பட்டுள்ளன. இந்தப் பேரிடர்களால் ஏற்பட்ட இழப்பு கிட்டத்தட்ட ரூ.8 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்ட சாலைகள், சேதமடைந்த பாலங்கள், பெயர்ந்து விழுந்த மின்கம்பங்கள், உடைந்த குடிநீர்க் குழாய்கள் என சீர்செய்ய வேண்டிய தேவைகள் ஏராளம். அந்தச் சேதங்கள் குறித்து மத்திய அரசாங்கத்தின் குழுவினர் அங்கு சென்று ஆய்வுமேற்கொண்டனர். இருந்தும் எவ்வித நிவாரண நிதியும் வந்துசேரவில்லை என்று இமாச்சலப் பிரதேசமுதல்வர் சுக்விந்தர் சிங் சுகு வருத்தம் தெரிவித்துள்ளார்.
இமாச்சலப் பிரதேசத்திற்கு உடனடி நிவாரணம் தேவைப்படுகிறது. எனவே மத்திய அரசு 2022-23ஆம் ஆண்டுக்கான பேரிடர் நிதியில் இருந்து நிலுவையில் உள்ள ரூ.315 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என்று முதல்வர் சுக்விந்தர் மத்திய அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த ஜுன் 24ஆம்தேதி அங்கு கனமழை பெய்யத் தொடங்கியது முதல் வெள்ளம், நிலச்சரிவு போன்ற பேரிடர்களில் சிக்கி இதுவரை 154 பேர் உயிரிழந்துவிட்டனர். 187 பேர் படுகாயம் அடைந்தனர். 15 பேரை காணவில்லை. மேலும், குடியிருப்புப் பகுதிகளில் ஏராளமான வீடுகள், கடைகள் போன்றவையும் கடுமையான சேதத்திற்கு உள்ளாகியுள்ளன.
சேதம் அடைந்த சாலைகள், மின் தடை மற்றும் குடிநீர்த் தட்டுப்பாடு போன்றவற்றை சரிசெய்ய வேண்டியுள்ளது. இயல்புவாழ்க்கை இழந்து மக்கள் தவித்துக்கொண்டிருக்கின்றனர். எனவே, இமாச்சலப் பிரதேசத்துக்கு உடனடி நிவாரணம் தேவை. மத்திய அரசிடமிருந்து 2022-23-ம் ஆண்டுக்கான பேரிடர் நிதியில் இருந்து நிலுவையில் உள்ள ரூ.315 கோடியை வழங்க வேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம். இருப்பிடம், குடிநீர், மின்சாரம், சாலைப்போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் இன்றி மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், பேரிடர் நிதியை மத்திய அரசு வழங்கி உள்ளதாக இமாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் கூறுவது ஏற்கத்தக்கதல்ல. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலத்துக்கு நிவாரணம் கிடைக்க அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்.

