புதுடெல்லி: மணிப்பூரில் நடந்த வன்கொடுமையைக் கண்டித்து, மக்களவையில் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர இண்டியா கூட்டணி பரிசீலனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஜூலை 20ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இக்கூட்டத் தொடரின்போது, பல பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவற்றில் மத்திய அமைப்புகளை ஏவி எதிர்க்கட்சிகளை ஒடுக்கப் பயன்படுத்துவது, மணிப்பூர் விவகாரம் ஆகியவையும் அடங்கும் என்று கூறப்படுகிறது.
மணிப்பூரில் இரு சமூகங்களுக்கு இடையே நடக்கும் கலவரத்தில் அண்மையில் இரு பெண்களை நிர்வாணப்படுத்தி அழைத்து சென்றது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக அவையில் விவாதிக்க தயார் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியபோதும், எதிர்க்கட்சிகள் அதனை ஏற்காமல் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக குரல் கொடுத்தனர். இதனால் கடந்த மூன்று நாட்களாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தை, தொடர்ந்து நடத்துவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டம் நடைபெற்றது. அதில் தங்களது கோரிக்கையில் இருந்து எதிர்க்கட்சிகள் பின்வாங்கப் போவது இல்லை என்பதால், அமளிகளுக்கு இடையில் அலுவல்களை நடத்த பாஜக அரசு முடிவெடுத்திருந்தது.
இதனிடையே மக்களவையில், மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை இண்டியா கூட்டணி கொண்டுவரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2003ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செவ்வாய்க்கிழமை நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பவே, அவை மதியம் 2 மணி வரையும் மாநிலங்களவை 12 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டது.

