திருவனந்தபுரம்: தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர், மலப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள கல்வி நிலையங்களுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
கேரளாவில் இன்றுவரை பல இடங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. தென்மேற்குப் பருவமழை தொடங்கியதில் இருந்து இப்போது கேரளாவில் குறிப்பாக மத்திய மற்றும் வடக்கு மாவட்டங்களில் தொடர்ச்சியாகக் கனமழை பெய்து வருகிறது.
இதற்கிடையில் எர்ணாகுளம், இடுக்கி, திரிச்சூர், பாலக்காடு, மலப்புரம், காசர்கோடு, கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் வடமேற்கு வங்கக்கடலில் ஒரு சூறாவளி அமைப்பு உருவாகி அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
அதனால் 24 மணி நேரத்தில் 115.6 மிமீ முதல் 204.4 மிமீ வரை மழை பெய்யும் என்றும் வரும் ஐந்து நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜூலை 27ஆம் தேதி வரை கேரளா மட்டுமல்லாது, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேரளாவில் கடலோரப் பகுதி மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் மகாராஷ்டிரா மாநிலத்திலும் கனமழை கொட்டி வருகிறது. ராய்காட் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
மும்பை, தானே, ராய்காட் ஆகிய மாவட்டங்களுக்கு நேற்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பால்கர் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களுக்கும் மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்துக்கு இன்றும் நாளையும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் இந்த வாரம் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு நிலையம் கூறியுள்ளது.